இது நடக்கவில்லை என்றால் இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லாது - கவுதம் கம்பீர்
|இது நடக்கவில்லை என்றால் இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லாது என கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். முதல் சுற்றில் விளையாடும் அணிகளில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.
இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அக்டோபர் 23ம் தேதி மெல்போர்னில் பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அணி இந்த டி-20 உலக கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க வேண்டும், இல்லையெனில் இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது,
நான் ஏற்கனவே கூறியது போல் இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லாது. அவர்கள் உலக கோப்பையை வெல்ல ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும்.
நாம் 2007ம் ஆண்டு டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணியை அரை இறுதியில் வீழ்த்தி உள்ளோம். மேலும், 2011 ஒருநாள் உலக கோப்பையில் கால் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி உள்ளோம். ஆஸ்திரேலிய அணி மிகவும் அபாயகரமான அணி. நீங்கள் அவர்களை வீழ்த்தினால் எந்த போட்டியிலும் வெற்றி பெறலாம் என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆஸ்திரேலிய அணி வரும் 20ம் தேதி முதல் இந்தியாவில் 3 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.