ஆசிய விளையாட்டு: கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
|ஆசிய விளையாட்டு தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் கிரிக்கெட் அரையிறுதி ஆட்டத்தில், இந்திய அணி வங்காளதேச அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஹாங்சோவ்,
ஆசிய விளையாட்டு தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங்கை துவங்கிய வங்காள தேசம் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி துவக்கத்தில் சற்று தடுமாறியது. ஜெய்ஸ்வால் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். எனினும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் திலக் வர்மா ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், இந்திய அணி 9.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இன்று மதியம் நடைபெறும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணியுடன் இந்திய அணி இறுதிப் போட்டியில் களமிறங்க உள்ளது. இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பதால் மேலும் ஒரு பதக்கம் இந்தியாவிற்கு உறுதியாகி உள்ளது.