3 வது ஒருநாள் போட்டி: தொடரை முழுமையாக வென்று இந்திய மகளிர் அணி அசத்தல்...!!
|இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.
லண்டன்,
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி ஏற்கனவே கைப்பற்றி உள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக மந்தனா, ஷபாலி வர்மா ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஷபாலி வர்மா மற்றும் யாஷ்டிகா ஆகியோர் 0 ரன்ஏதும் எடுக்காமல் வெளியேற அவர்களை தொடர்ந்து, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 4 ரன், ஹார்லீன் 3 ரன் ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அப்போது 29 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.
இதையடுத்து தீப்தி ஷர்மா மந்தனாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுமையாக ஆடியது. அதில் மந்தனா அரைசதத்தை பதிவு செய்திருந்தநிலையி 50 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இறுதியில் இந்திய அணி 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 169 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்திய அணி தரப்பில் தீப்தி ஷர்மா 68 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இங்கிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக கிராஸ் 4 விக்கெட்டுகளும் கெம்ப் 2 விக்கெட்டுகளும், டேவிஸ் மற்றும் டீன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இங்கிலாந்து அணியின் சார்பில் களமிறங்கிய எம்மா லாம்ப் 21 ரன்களும், பேமவுண்ட் 8 ரன்னும், கேப்சே 5 ரன்னும், டங்லே 7 ரன்னும், வியாட் 8 ரன்னும், எக்லேஸ்டான் ரன் ஏதும் எடுக்காமலும், கெம்ப் 5 ரன்னும், எமி ஜோன்ஸ் 28 ரன்களும், கேட் கிராஸ் 10 ரன்களும் எடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்ததாக 10 விக்கெட்டுக்கு டீனுடன் டேவிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சார்லோட் டீன் 47 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
இறுதியில் டேவிஸ் 10 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் இங்கிலாந்து அணி 43.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளும், ஜூலன் கோஸ்வாமி மற்றும் கெய்க்வாட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், தீப்தி சர்மா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என கைப்பற்றியது.
இதனிடையே இந்த போட்டியுடன் இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி ஓய்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.