இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா நிச்சயமாக வெல்லும் ஆனால்.. - சவுரவ் கங்குலி
|இந்தியாவில் சுழலும் விக்கெட்டுகள் இருப்பதால், இங்கு பேஸ்பால் அணுகுமுறை பொருந்தாது.
ஐதராபாத்,
இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி ஜெய்ஸ்வால், ராகுல், ஜடேஜா ஆகியோரின் அரைசதத்துடன் 436 ரன்கள் எடுத்தது.
190 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் எடுத்து 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 4ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா நிச்சயமாக வெல்லும் என இந்திய முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இந்தியா தொடரை நிச்சயம் வெல்லும். அது 4-0 அல்லது 5-0 என்ற கணக்கில் வெற்றி பெறுமா என்பதே பார்க்க வேண்டிய விஷயம். ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் தீர்க்கமானதாக இருக்கும். இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து நன்றாக பேட்டிங் செய்தால் வெற்றி பெறலாம்.
இந்திய மண்ணில் 230 அல்லது 240 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற முடியாது. 350 அல்லது 400 ரன்கள் எடுத்தால், அவர்கள் இந்தியாவை வீழ்த்தலாம். ஆனால் அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை. இங்கிலாந்துக்கு இது கடினமான தொடர்.
பழைய காலத்து ஆஸ்திரேலியாவைத் தவிர வேறு எந்த அணியாலும் இங்கு எந்தத் தாக்கத்தையும் உருவாக்க முடியவில்லை. பேஸ்பால் என்பது போட்டியை வேகமாக விளையாடும் அணுகுமுறையாகும். இந்தியாவில் சுழலும் விக்கெட்டுகள் இருப்பதால், இங்கு பேஸ்பால் பொருந்தாது, இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை குறித்து பேசுகையில், டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. சமீபத்தில், ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது பரிதாபமாக இருந்தது.
போட்டி முழுவதும் மிகச் சிறந்த முறையில் விளையாடிய பிறகு அவர்கள் தோல்வியடைவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை, ஆனால் விளையாட்டு என்றால் அது நடக்கத்தான் செய்யும். இந்தியா மிகவும் நல்ல அணியாக உள்ளது. மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்கா போன்ற நாடுகளின் சூழல் இந்தியாவைப்போல் இருப்பதால் இந்தியாவுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும். உலகக் கோப்பைக்கான ஆயத்தப் போட்டியாக ஐபிஎல் இருக்கும், என்றார்.
இதையடுத்து இந்திய அணியின் இளம் வீரர்கள் குறித்து கூறியதாவது, அவர்கள் இந்தியாவுக்காக விளையாட தகுதியானவர்கள். ஜெய்ஸ்வால் நன்றாக விளையாடி உள்ளார். சுப்மன் கில் தொடர்ந்து நன்றாக விளையாட வேண்டும். பேட்டிங் வரிசையில் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது.
என்னைப் பொறுத்தவரை, ஜெய்ஸ்வால் அனைத்து வகை கிரிக்கெட்டுக்குமான வீரர். காயத்தில் இருந்து மீண்டு வரும்போது ரிஷப் பண்ட் ஒரு பெரிய வீரராக இருப்பார். ஸ்ரேயாஸ் ஐயர், பண்ட் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் நிறைய மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.