< Back
கிரிக்கெட்
தொடரை வெல்ல தயாராகும் இந்தியா: கடைசி ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்
கிரிக்கெட்

தொடரை வெல்ல தயாராகும் இந்தியா: கடைசி ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்

தினத்தந்தி
|
21 Dec 2023 5:53 AM IST

இந்திய அணி தொடரை வெல்வதற்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஒருங்கிணைந்து கைகொடுக்க வேண்டியது அவசியமாகும்.

பார்ல்,

இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 2 போட்டிகள் முடிவடைந்தநிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற புள்ளிகணக்கில் சமனில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பார்ல் நகரில் உள்ள போலன்ட் பார்க் மைதானத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.

கடந்த ஆட்டத்தில் இந்திய அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன் (62 ரன்), கேப்டன் லோகேஷ் ராகுல் (56 ரன்) தவிர யாரும் தாக்குப்பிடிக்கவில்லை. இந்திய அணி தொடரை வெல்வதற்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஒருங்கிணைந்து கைகொடுக்க வேண்டியது அவசியமாகும்.

உள்நாட்டில் இந்தியாவுக்கு எதிராக 6 முறை ஒரு நாள் தொடரில் ஆடியதில் அதில் 5-ல் தொடரை வென்று இருக்கும் தென்ஆப்பிரிக்க அணி தனது ஆதிக்கத்தை தொடர தீவிரம் காட்டும். பார்ல் மைதானத்தில் 5 ஆட்டங்களில் ஆடி இருக்கும் இந்திய அணி 2 வெற்றி, 2 தோல்வி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் 'டை'யில் முடிந்தது. இங்கு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 ஆட்டங்களில் ஆடி அனைத்திலும் தோற்றதும் இதில் அடங்கும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

இந்தியா: ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, லோகேஷ் ராகுல் (கேப்டன்), சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார்.

தென்ஆப்பிரிக்கா: ரீஜா ஹென்ரிக்ஸ், டோனி டி ஜோர்ஜி, வான்டெர் டஸன், மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வியான் முல்டெர், கேஷவ் மகராஜ், நன்ரே பர்கர், லிசாத் வில்லியம்ஸ், பீரன் ஹென்ரிக்ஸ்.

மேலும் செய்திகள்