இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்
|இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் இன்று தொடங்குகிறது.
டொமினிகா,
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.
முதலில் டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
இந்த தொடர் 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் அந்த வகையில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்திய அணியினர் வெற்றியோடு தொடங்கும் வேட்கையுடன் கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சோபிக்க தவறியதால் புஜாரா அணியில் இருந்து தடாலடியாக கழற்றி விடப்பட்டார். மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, உமேஷ் யாதவும் இடம்பெறவில்லை. ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் காயத்தில் இருந்து மீளவில்லை. அதனால் இந்த தொடருக்கான இந்திய அணியில் சில புதுமுக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
ஜெய்ஸ்வால் அறிமுகம்?
புஜாராவுக்கு பதிலாக பேட்டிங்கில் 3-வது வரிசையில் ஆடுவதற்கு 'இளம் புயல்' ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது. இதில் 21 வயதான ஜெய்ஸ்வாலுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிகிறது. ஜெய்ஸ்வால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு சதம், 5 அரைசதம் உள்பட 625 ரன்கள் குவித்து அசத்தினார். இதே போல் டெஸ்டிலும் சக்ரவர்த்தியாக திகழுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஆவலை தூண்டியுள்ளது.
விக்கெட் கீப்பர் இடத்திற்கு கே.எஸ்.பரத்துக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்படுவாரா? என்பது போட்டிக்கு முன்பாகத் தெரிய வரும். மற்றபடி மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா, அஜிங்யா ரஹானே விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பொறுப்புணர்வுடன் மட்டையை சுழற்ற வேண்டியது அவசியமாகும்.
பவுலிங்கில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் மிரட்டுவதற்கு காத்திருக்கிறார்கள். போதிய அனுபவம் இல்லாத முகேஷ்குமார், ஜெய்தேவ் உனட்கட், ஷர்துல் தாக்குர், நவ்தீப் சைனி ஆகியோரில் இருவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கும்.
இந்திய அணியை பொறுத்தவரை கடந்த 21 ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிராாக முழுமையாக கோலோச்சி வருகிறது. 2002-ம் ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக எந்த ஒரு டெஸ்டிலும் தோற்றதில்லை. அதாவது 2002-ம் ஆண்டில் இருந்து இவ்விரு அணிகள் மோதிய 8 டெஸ்ட் தொடர்களையும் (உள்நாட்டில் 4, வெளிநாட்டில் 4) இந்தியாவே வசப்படுத்தியுள்ளது. அத்தகைய ஆதிக்கத்தை இந்த முறையும் இந்தியா தொடருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வெஸ்ட் இண்டீஸ் எப்படி?
அண்மையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றில் தோற்று முதல் முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதற்கு பரிகாரம் தேட முயற்சிக்கும். கிரேக் பிராத்வெய்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை எந்த வகையிலும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. கடந்த ஆண்டு ஒரு டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை பந்தாடியது. ஒருங்கிணைந்து முழு திறமையை வெளிப்படுத்தினால் வெஸ்ட் இண்டீஸ் நிச்சயம் அபாயகரமான அணி தான்.
கேப்டன் பிராத்வெய்ட், சந்தர்பாலின் மகன் தேஜ்நரின், பிளாக்வுட் நன்றாக ஆடக்கூடியவர்கள். உள்நாட்டு போட்டிகளில் ரன் குவித்ததால் முதல் முறையாக தேசிய அணிக்கு தேர்வாகியுள்ள பேட்ஸ்மேன்கள் கிர்க் மெக்கென்சி, அலிக் அதானேசும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. பந்து வீச்சில் ஜாசன் ஹோல்டர், ஜோசப், கான்வால், ரோச் அவர்களுக்குரிய நாளாக அமைந்து விட்டால் ஒருகை பார்த்து விடுவார்கள்.
மொத்தத்தில் உள்ளூர் மண்ணில் இழந்த பெருமையை மீட்கும் உத்வேகத்துடன் ஆடுவார்கள் என்பதால் இந்தியாவுக்கு பலமான சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
இரவு 7.30 மணிக்கு...
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: சுப்மன் கில், ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரஹானே, கே.எஸ்.பரத் அல்லது இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ், உனட்கட் அல்லது முகேஷ்குமார் அல்லது நவ்தீப் சைனி.
வெஸ்ட் இண்டீஸ்: கிரேக் பிராத்வெய்ட் (கேப்டன்), தேஜ்நரின் சந்தர்பால், ரேமன் ரீபர், ஜெர்மைன் பிளாக்வுட், கிர்க் மெக்கென்சி, ஜோஷூவா டா சில்வா, அலிக் அதானேஷ், ஜாசன் ஹோல்டர், அல்ஜாரி ஜோசப், கெமார் ரோச் அல்லது ஷனோன் கேப்ரியல், ரகீம் கார்ன்வால்.
இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை டி.டி. ஸ்போர்ட்ஸ் டி.வி. சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா, பேன் கோர்டு ஆகிய செயலியிலும் பார்க்கலாம்.
சாதனை துளிகள்
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை 98 டெஸ்டுகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 22-ல் இந்தியாவும், 30-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளன. 46 போட்டி டிராவில் முடிந்தது. இவற்றில் இருந்து சில சாதனை புள்ளி பட்டியல் வருமாறு:-
அதிக ரன் குவித்தவர்: சுனில் கவாஸ்கர் (இந்தியா) - 2,749 ரன் (27 டெஸ்ட்), கிளைவ் லாயிட் (வெஸ்ட் இண்டீஸ்)- 2,344 ரன் (28)
தனிநபர் அதிகபட்சம்: ரோகன் கன்ஹாய் (வெஸ்ட் இண்டீஸ்)- 256 ரன் (கொல்கத்தா, 1958), சுனில் கவாஸ்கர் (இந்தியா)- 236* ரன் (சென்னை, 1983)
அணி அதிகபட்சம்: இந்தியா 649/9 டிக்ளேர் (ராஜ்கோட், 2018), வெஸ்ட் இண்டீஸ் 644/8 டிக்ளேர் (டெல்லி, 1959).
அணி குறைந்த பட்சம்: இந்தியா 75 ரன் (டெல்லி, 1987), வெஸ்ட் இண்டீஸ் 100 ரன் (நாார்த் சவுன்ட், 2019)
அதிக விக்கெட் வீழ்த்தியோர்: கபில்தேவ் (இந்தியா)- 89 விக்கெட் (25), மால்கம் மார்ஷல் (வெஸ்ட் இண்டீஸ்)- 76 விக்கெட் (17)
'நான் இன்னும் இளம் வீரர்தான்' -ரஹானே
இந்திய அணியின் துணை கேப்டன் 35 வயதான அஜிங்யா ரஹானே அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் இந்திய அணியில் துணை கேப்டனாக இருந்திருக்கிறேன். மீண்டும் அணிக்கு திரும்பியதுடன் துணை கேப்டன் பதவியும் கிடைத்தது உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
நான் இன்னும் இளமையாகவே இருக்கிறேன். நிறைய கிரிக்கெட் வாழ்க்கை எனக்கு எஞ்சி இருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எனது உடல்தகுதியை சீராக வைத்திருப்பதில் கடுமையாக உழைத்தேன். பேட்டிங்கில் சில குறைபாடுகளை சரி செய்வதில் கவனம் செலுத்தினேன். கிரிக்கெட்டை அனுபவித்து உற்சாகமாக விளையாடுகிறேன். எதிர்காலம் குறித்து அதிகமாக சிந்திப்பதில்லை. ஒவ்வொரு போட்டியும் எனக்கு முக்கியமானது.
எனது பேட்டிங் அணுகுமுறையை மாற்றவில்லை. முன்பு நிலைத்து நின்று விளையாடுவது தான் எனது பணியாக இருந்தது. அதற்கு ஏற்ப விளையாடினேன். ஆனால் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களம் இறங்கிய போது, எதைப்பற்றியும் கவலைப்படாமல் என்னுடைய இயல்பான அதிரடியை வெளிப்படுத்துவதற்கு சுதந்திரம் கொடுத்தார்கள். எனக்கு வழங்கப்பட்ட பணியை நிறைவு செய்ய முயற்சித்தேன். உண்மையில் நான் அதிரடியாக ஆடக்கூடிய ஒரு வீரர். எப்போதும் ரன் குவிப்பதிலேயே குறியாக இருப்பேன். அணி நிர்வாகம் என்னிடம் இருந்து எதை எதிர்பார்க்கிறதோ அதை செய்வதே எனது நோக்கம். அணியில் என்னுடைய 'ரோல்' மாறிவிட்டது. வேறு எதுவும் மாறவில்லை.
கேப்டன் ரோகித் சர்மா வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளித்து, அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார். இந்த பண்பு அவரை மிகச்சிறந்த கேப்டனாக அடையாளம் காட்டுகிறது.
நாங்கள் வெஸ்ட் இண்டீசை குறைத்து மதிப்பிடவில்லை. வெளியில் மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பது தெரியாது. ஆனால் நாங்கள் அவர்களை எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதே உண்மை.
இவ்வாறு ரஹானே கூறினார்.