< Back
கிரிக்கெட்
ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடரை முழுமையாக வெல்லும் உத்வேகத்தில் இந்தியா
கிரிக்கெட்

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடரை முழுமையாக வெல்லும் உத்வேகத்தில் இந்தியா

தினத்தந்தி
|
22 Aug 2022 12:44 AM IST

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடரை முழுமையாக வெல்லும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று கடைசி ஆட்டத்தில் விளையாடுகிறது.

ஒரு நாள் கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. அந்த நாட்டு அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் சொந்தமாக்கி விட்டது. இந்த நிலையில் இந்தியா- ஜிம்பாப்வே இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது.

இந்த ஆடுகளம் ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமாக காணப்படுகிறது. நன்கு ஸ்விங் ஆகிறது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட இந்திய வேக சூறாவளிகள் விக்கெட்டுகளை மளமளவென சாய்த்து ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்து விட்டனர். இரண்டு ஆட்டங்களிலும் 50 ஓவர்கள் கூட தாக்குப்பிடிக்காத ஜிம்பாப்வே 189 மற்றும் 161 ரன்கள் வீதம் எடுத்து முடங்கிப்போனது. பந்து வீச்சில் முதல் ஆட்டத்தில் தீபக் சாஹரும், 2-வது ஆட்டத்தில் ஷர்துல் தாக்குரும் தலா 3 விக்கெட் வீழ்த்தி மிரட்டினர்.

மாற்று வீரர்களுக்கு வாய்ப்பு?

பேட்டிங்கை எடுத்துக் கொண்டால் இந்தியாவின் தொடக்க ஜோடி சுப்மான் கில்லும், ஷிகர் தவானும் நேர்த்தியாக ஆடினர். தொடக்க ஆட்டத்தில் 190 ரன்கள் இலக்கை விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்தனர். ஆனால் தற்போது தொடரை வென்று விட்டதால் இன்றைய ஆட்டத்தில் தவானுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் இடம் பெற வாய்ப்பு உண்டு. இதே போல் நடப்பு தொடரில் இன்னும் வாய்ப்பு அளிக்கப்படாத சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் அகமது, வேகப்பந்து வீச்சாளர் அவேஷ்கான் ஆகியோரது பெயரும் பரிசீலிக்கப்படுகிறது.

முதல் இரு ஆட்டங்களில் டாஸ் ஜெயித்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த இந்திய கேப்டன் லோகேஷ் ராகுல், இன்றைய ஆட்டத்தில் டாஸ் ஜெயித்தால் தங்களது பேட்டிங் திறனை பரிசோதித்து பார்க்க முதலில் பேட்டிங்குக்கு முன்னுரிமை அளிக்கலாம். மொத்தத்தில் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வெல்லும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் ஆயத்தமாக உள்ளனர்.

தள்ளாடும் ஜிம்பாப்வே

உள்ளூர் சூழலில் ஆடும் ஜிம்பாப்வே தொடர்ந்து தள்ளாடுகிறது. குறிப்பாக அவர்களின் டாப் வரிசை பேட்டிங் சொதப்பலால் எழுச்சி பெற முடியவில்லை. 2020-ம் ஆண்டில் இருந்து இதுவரை 14 வெவ்வேறு தொடக்க ஜோடியை பயன்படுத்தி பார்த்து விட்டனர். ஆனால் ஒரு ஜோடி கூட தொடக்க விக்கெட்டுக்கு செஞ்சுரி பார்ட்னர்ஷிப் கொடுக்கவில்லை. அது தான் அவர்களின் பலவீனமாக உள்ளது. இன்றைய ஆட்டத்தில் தொடக்க வரிசை வீரர்கள் ஓரளவு நிலைத்து நின்று ஆடினால் சவால் அளிக்கலாம். இல்லாவிட்டால் வழக்கம் போல் சரணாகதியாக வேண்டியது தான்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: சுப்மான் கில், ஷிகர் தவான் அல்லது ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், லோகேஷ் ராகுல் (கேப்டன்), தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், அக்‌ஷர் பட்டேல் அல்லது ஷபாஸ் அகமது, ஷர்துல் தாக்குர் அல்லது தீபக் சாஹர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா அல்லது அவேஷ்கான், குல்தீப் யாதவ்.

ஜிம்பாப்வே: தகுட்வனாஷி கைடானோ, இன்னசென்ட் கையா, ரெஜிஸ் சகப்வா (கேப்டன்), வெஸ்லி மாதேவிர் அல்லது டோனி முனியோங்கா, சிகந்தர் ராசா, சீன் வில்லியம்ஸ், ரையான் பர்ல், லூக் ஜாங்வி, பிராட் இவான்ஸ், விக்டர் யாச்சி, தனகா சிவாங்கா.

இந்திய நேரப்படி பிற்பகல் 12.45 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி டென் 3, 4 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

மேலும் செய்திகள்