< Back
கிரிக்கெட்
லாகூரில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி போட்டி..?
கிரிக்கெட்

லாகூரில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி போட்டி..?

தினத்தந்தி
|
3 July 2024 7:05 PM IST

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19ந் தேதி முதல் மார்ச் 9ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மும்பை,

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடக்க உள்ளது. பாகிஸ்தானில் நடக்கும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க 8 அணிகள் தகுதிபெற்றுள்ளன. உலகக்கோப்பை தொடரில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்த தொடரில் விளையாட உள்ளன. இந்த தொடர் பிப்ரவரி 19ந் தேதி முதல் மார்ச் 9ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் 'குரூப் ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளும், 'குரூப் பி' பிரிவில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே பாகிஸ்தானில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஐ.சி.சி. பாதுகாப்பு குழு ஆய்வு செய்துள்ளது.

இதன்படி முதல் 20 நாளில் 15 போட்டிகள் நடைபெற உள்ளது. லாகூர் மைதானத்தில் 7 போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் கராச்சியில் 3 போட்டிகளையும், ராவல்பிண்டியில் 5 போட்டிகளையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி விளையாட உள்ள அத்தனை போட்டிகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக லாகூரிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அரையிறுதிப் போட்டிகள் கராச்சி மற்றும் ராவல்பிண்டியிலும், இறுதிப்போட்டி லாகூரிலும் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறினால், அந்தப் போட்டி லாகூருக்கு மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ள ஆட்டம் லாகூர் மைதானத்தில் மார்ச் 1ந் தேதி நடத்தப்பட உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. ஆனால் பி.சி.சி.ஐ. தரப்பில் வரைவு அட்டவணைக்கான எந்த ஒப்புதலும் அளிக்கப்படவில்லை. இதுகுறித்து ஐ.சி.சி. தரப்பில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க உள்ள 8 நாடுகளில் பி.சி.சி.ஐ. தவிர்த்து மற்ற 7 நாடுகளும் அனைத்து வகையிலும் ஆதரவு அளிப்போம் என்று கூறியுள்ளன.

இந்த போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா? என்பது தற்போதுவரை உறுதியில்லை. மத்திய அரசின் அனுமதியை பொறுத்துதான் இருக்கிறது. இதனால் பி.சி.சி.ஐ. தரப்பில் இருந்து விரைவில் மத்திய அரசிடம் அனுமதி கேட்டு முடிவு செய்வார்கள் என்று கூறப்படுகிறது. கடந்த 2008-ம் ஆண்டு ஆசிய கோப்பைக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்