பெண்கள் டி20 போட்டி - வங்காள தேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
|5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4-0 என இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
சில்ஹெட்,
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் 3 போட்டிகள் முடிந்த நிலையில் 3 ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 3-0 என முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 4 வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் இந்திய அணி பேட்டிங் ஆடியது. அப்போது 5.5 ஓவர்கள் நடந்து கொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் டி.எல்.எஸ் முறையில் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்திய அணி 14 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில், அதிகபட்சமாக ஹர்மன் பிரீத் கவுர் 39 ரன்களும் ரிச்சா கோஷ் 24 ரன்களும், மந்தனா மற்றும் ஹெமலதா ஆகியோர் 22 ரன்களும் எடுத்தனர். வங்காளதேச தரப்பில் அதிகபட்சமாக மருபா அக்தர் மற்றும் ரேபியா கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இதையடுத்து 123 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்காளதேச அணி 14 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்காளதேச தரப்பில் அதிகபட்சமாக திலரா அக்தர் 21 ரன்களும் ரூப்யா கெய்டர் 13 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஆஷா சோபனா மற்றும் டைடஸ் சது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினர். இதன் மூலம் 56 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4-0 என இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 5வது டி20 போட்டி வரும் 9ம் தேதி நடைபெறுகிறது.