< Back
கிரிக்கெட்
இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒருநாள் தொடர்  : மும்பையில் இன்று நடக்கிறது
கிரிக்கெட்

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒருநாள் தொடர் : மும்பையில் இன்று நடக்கிறது

தினத்தந்தி
|
17 March 2023 5:51 AM IST

இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடக்கிறது.

மும்பை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு மோதலாக மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இந்தியாவில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடப்பதால், அதற்கு அணியை சரியான திட்டமிடலுடன் தயார்படுத்துவதற்கு இந்த தொடர் அடித்தளமாக இருக்கும். அதை நோக்கியே இரு அணிகளின் வியூகங்களும் அமையும்.



ரோகித் இல்லை

இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, நெருங்கிய உறவினருக்கு திருமணம் காரணமாக தொடக்க ஆட்டத்தில் மட்டும் ஆடமாட்டார். அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அணியை வழிநடத்துகிறார். ரோகித் இல்லாததால் சுப்மன் கில்லுடன், இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக இறங்குவார் என்பதை பொறுப்பு கேப்டன் ஹர்திக் பாண்ட்யா உறுதி செய்தார்.

20 ஓவர் கிரிக்கெட்டில் 'நம்பர் ஒன்' பேட்ஸ்மேனாக கலக்கும் சூர்யகுமார் யாதவ் ஏனோ ஒரு நாள் போட்டியில் இன்னும் ஜொலிக்கவில்லை. கடைசியாக களம் கண்ட 4 ஒரு நாள் இன்னிங்ஸ்களில் 6, 4, 31, 14 ரன் வீதமே எடுத்துள்ளார். காயத்தால் ஸ்ரேயாஸ் அய்யர் ஒதுங்கி இருப்பதால் கிடைத்துள்ள பொன்னான வாய்ப்பை அவர் கச்சிதமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.



சாதனையை நோக்கி கோலி

ஆமதாபாத் டெஸ்டில் சதம் அடித்ததால் நட்சத்திர வீரர் விராட் கோலி கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணுவார். ஒரு நாள் கிரிக்கெட்டில் கடைசி 7 இன்னிங்சில் 3 சதங்கள் விளாசியுள்ள கோலி ஒட்டுமொத்தத்தில் 46 சதங்கள் அடித்துள்ளார். ஒரு நாள் போட்டியில் அதிக சதங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கும் சச்சின் தெண்டுல்கரை சமன் செய்வதற்கு இன்னும் 3 சதம் தேவையாகும்.

அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதம் அடித்தவரான தெண்டுல்கரின் மற்றொரு சாதனையை (9 சதம்) சமன் செய்வதற்கு கோலிக்கு இன்னும் ஒரு சதம் தேவையாகும். இப்படி சிகரத்தை நோக்கி பயணிக்கும் விராட் கோலி இந்த தொடரில் ஏதாவது ஒரு ஆட்டத்தில் நூறு போட்டாலும் அது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும்.

மற்றபடி ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுலும் பேட்டிங்கில் வலு சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் முகமது ஷமி, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் கட்டுக்கோப்புடன் பவுலிங் செய்வதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.



ஆஸ்திரேலியா எப்படி?

ஆஸ்திரேலிய அணியும், இந்தியாவுக்கு நிகராக பலம் வாய்ந்ததாக விளங்குகிறது. தாயாருக்கு உடல்நலக்குறைவால் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் டெஸ்ட் தொடரின் போது பாதியில் விலகி தாயகம் திரும்பினார். அங்கு அவரது தாயார் இறந்து விட்டதால் துக்கமான இந்த சூழலில் குடும்பத்தினருடன் தங்கி இருக்கிறார். இதனால் ஒரு நாள் தொடரில் இருந்து விலகி விட்டார். ஆஸ்திரேலியாவின் கேப்டன் பொறுப்பை ஸ்டீவன் சுமித் கவனிக்க உள்ளார்.

ஆல்-ரவுண்டர்கள் கிளைன் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ் ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டு அணியுடன் இணைந்திருப்பது அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும். முழங்கை காயத்தில் இருந்து குணமடைந்துள்ள டேவிட் வார்னரும் ரன்வேட்டைக்கு ஆயத்தமாக உள்ளார். பந்து வீச்சில் ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க், நாதன் எலிஸ் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

மொத்தத்தில் இரு அணிகளும் பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்திய அணி இந்த ஆண்டில் உள்ளூரில் ஆடிய 6 ஒரு நாள் போட்டிகளிலும் வாகை சூடியுள்ளது. இதே போல் ஆஸ்திரேலியா தனது கடைசி 6 ஒரு நாள் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. இவர்களில் யாருடைய வீறுநடை முடிவுக்கு வரப்போகிறது என்பதை பார்ப்பதும் சுவாரஸ்யமாக இருக்கும்.



மைதான கண்ணோட்டம்

மும்பை வான்கடே ஸ்டேடியம் பொதுவாக பேட்டிங்குக்கு சாதகமானது என்பதால் ரன் விருந்தை எதிர்பார்க்கலாம். இங்கு இந்திய அணி இதுவரை 19 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 10-ல் வெற்றியும், 9-ல் தோல்வியும் கண்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 ஆட்டங்களில் ஆடி அதில் 3-ல் தோற்றதும் அடங்கும்.

2015-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட்டுக்கு 438 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும். கடைசியாக 2020-ம் ஆண்டு ஜனவரியில் இங்கு நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 255 ரன்னில் ஆட்டமிழந்ததும், அந்த இலக்கை ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 12 ஓவர்கள் மீதம் வைத்து எட்டிப்பிடித்ததும் நினைவு கூரத்தக்கது.

பிற்பகல் 1.30 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: சுப்மன் கில், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் அல்லது ரஜத் படிதார், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல் அல்லது வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ், முகமது ஷமி அல்லது உம்ரான் மாலிக்.

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), மார்னஸ் லபுஸ்சேன், மிட்செல் மார்ஷ் அல்லது மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, சீன் அப்போட் அல்லது நாதன் எலிஸ்.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

இதுவரை...

இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை 143 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 80-ல் ஆஸ்திரேலியாவும், 53-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டத்தில் முடிவில்லை.

இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா நேரடி ஒரு நாள் தொடரில் ஆடுவது இது 11-வது முறையாகும். முந்தைய 10 தொடர்களை இரு அணிகளும் தலா 5 வீதம் கைப்பற்றி இருந்தன.

தரவரிசை எப்படி மாறும்?

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா 114 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன. 'நம்பர் ஒன்' இடத்தை தக்க வைக்க இந்திய அணி இந்த தொடரை வென்றாக வேண்டும். மாறாக ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றினால் அந்த அணி முதலிடத்துக்கு முன்னேறும். இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வசப்படுத்தினால் புள்ளி எண்ணிக்கையை 117 ஆக உயர்த்தி கம்பீரமாக முதலிடத்தில் பயணிக்கும். அப்போது ஆஸ்திரேலியா 111 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு தள்ளப்படும். அதே சமயம் இந்தியா 0-3 என்ற கணக்கில் தோற்றாலும் 4-வது இடத்துக்கு சரிவடையும்.

மேலும் செய்திகள்