கடைசி ஒருநாள் போட்டி: இலங்கையை பந்தாடியது இந்தியா: 317 ரன்கள் வித்தியாசம்- புதிய சாதனை
|இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
திருவனந்தபுரம்,
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை பாண்ட்யா தலைமயிலான இளம் வீரர்கள் 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தினர். இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
அடுத்ததாக இரு அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்திய அணியின் பேட்ஸ்மேன்க்ள் இலங்கை பந்து வீச்சை துவக்கத்தில் இருந்தே விளாசித்தள்ளினர். அதிலும் சுப்மன் கில் மற்றும் விராட் கோலியின் ஆட்டத்தில் அனல் பறந்தது. அபாரமாக விளையாடிய சுப்மன் கில் சதம் விளாசினார். 97 பந்துகளில் 14 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை விளாசி 116 ரன்கள் குவித்த சுப்மன் கில், இலங்கை வீரர் ரஜிதாவின் பந்துவீச்சில் போல்ட் ஆனார். அதேபோல் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரன் மெஷின் விராட் கோலியும் சதம் விளாசினார். சர்வதேச போட்டிகளில் விராட் கோலி அடிக்கும் 46-வது சதம் இதுவாகும்.
இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் குவித்தது. இதையடுத்து 391 என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடியது. இமாலய இலக்கை துரத்திய இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கை அணி 22 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. வெறும் 73 ரன்களில் இலங்கை அணி சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.