< Back
கிரிக்கெட்
இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று நாளில் நடைபெறும்: ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு
கிரிக்கெட்

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று நாளில் நடைபெறும்: ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு

தினத்தந்தி
|
8 Sep 2023 8:25 PM GMT

நாளை (10-ந் தேதி) நடக்கும் இந்தியா-பாகிஸ்தான் சூப்பர்4 சுற்று ஆட்டத்திற்கு மட்டும் மாற்று நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர்4 சுற்றில் எஞ்சிய 5 ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் நடக்கிறது. ஏற்கனவே கடந்த 2-ந் தேதி பல்லகெலேயில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. தற்போது கொழும்பில் அடிக்கடி மழை பெய்வதால் எஞ்சிய ஆட்டங்களும் மழையால் பாதிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. முதலில் உருவாக்கப்பட்ட போட்டி அட்டவணைப்படி 17-ந்தேதி நடைபெறும் இறுதிப்போட்டி தவிர மற்ற எந்த ஆட்டங்களுக்கும் மாற்று நாள் (ரிசர்வ் டே) கிடையாது.

இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் லீக் ஆட்டம் ரத்தானதால் வருவாய் இழப்பை சந்தித்து இருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியிருந்தது.

இதைத் தொடர்ந்து கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நாளை (10-ந் தேதி) நடக்கும் இந்தியா-பாகிஸ்தான் சூப்பர்4 சுற்று ஆட்டத்திற்கு மட்டும் மாற்று நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று நாளான அடுத்த நாளில் (11-ந் தேதி) போட்டி நிறுத்தப்பட்ட நிலையில் இருந்து தொடர்ந்து நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்திய அணியின் ஆட்டத்துக்கு மட்டும் மாற்று நாள் அறிவித்து இருப்பதற்கு போட்டியில் பங்கேற்று இருக்கும் மற்ற நாடுகள் அதிருப்தி தெரிவித்து இருக்கின்றன. வங்காளதேச அணியின் பயிற்சியாளர் சந்திகா ஹதுரசிங்கா கூறுகையில், 'இது சரியான முடிவு கிடையாது. எங்களுடைய ஆட்டங்களுக்கும் மாற்று நாள் வேண்டும் என்று விரும்புகிறோம்' என்றார். இதேபோல் இலங்கை அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் கருத்து தெரிவிக்கையில், 'இந்த அறிவிப்பு சற்று ஆச்சரியம் அளிக்கிறது. மாற்று நாள் மூலம் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு புள்ளிகள் கிடைக்கும் பட்சத்தில் அது எங்களை பாதிக்கும்' என்றார்.

மேலும் செய்திகள்