இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட்: ரசிகர்கள் இன்றி காலியாக கிடந்த ஸ்டேடியம்
|ரசிகர்களின் மோகம் குறைந்ததற்கு மழை தாக்கமும் காரணமாக இருக்கலாம்.
கொழும்பு,
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சூப்பர்4 சுற்று ஆட்டம் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் பகல்-இரவு மோதலாக நேற்று நடந்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்த போது மழையால் ஆட்டம் நீண்ட நேரம் பாதிக்கப்பட்டு மறுநாளுக்கு நகர்ந்தது.
இந்த ஆட்டத்தை நேரில் பார்க்க ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இல்லை. ஸ்டேடியத்தின் பெரும்பகுதி ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பரம எதிரிகள் இந்தியா- பாகிஸ்தான் மல்லுகட்டியதால் ரசிகர்கள் படையெடுப்பார்கள் என்று எதிர்பார்த்த இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா- பாகிஸ்தான் ஆட்டங்கள் நடந்த மிர்புர், மெல்போர்ன், அடிலெய்டு, துபாய், பர்மிங்காம், லண்டன், மான்செஸ்டர் மைதானங்களில் ரசிகர்களின் வருகை அதிகமாக காணப்பட்டது. ஆனால் இங்கு ரசிகர்களின் மோகம் குறைந்ததற்கு மழை தாக்கமும் காரணமாக இருக்கலாம்.
மேலும் இந்த ஆட்டம் கொழும்பில் இருந்து ஹம்பன்டோட்டாவுக்கு மாற்றப்படலாம் என்ற பேச்சும் டிக்கெட் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறினார். இத்தனைக்கும் டிக்கெட் விலை வெகுவாக குறைக்கப்பட்டிருந்தது. சி, டி மேல் தளத்தின் டிக்கெட் விலை இலங்கை ரூபாயில் ஆயிரமாகவும் (இந்திய மதிப்பில் ரூ.260) சி, டி கீழ் தள டிக்கெட் ரூ.500 ஆகவும் குறைக்கப்பட்டு இருந்தது.