இந்தியா-நியூசிலாந்து 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை நடக்கிறது..!
|இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
வெலிங்டன்,
மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சென்றுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா உள்பட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதால் 20 ஓவர் அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவும், ஒருநாள் போட்டி அணிக்கு ஷிகர் தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் உள்ள ஸ்கை ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி நேற்று பகல் 12 மணிக்கு தொடங்கி நடக்க இருந்தது.
ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே மழை புகுந்து விளையாடியது. மழை ஓய்ந்து போட்டி தொடங்கும் என்று காத்து இருந்த ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்களுக்கும் இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.
மழை தொடர்ந்து பெய்ததால் மைதானம் சேறும், சகதியுமாக காட்சியளித்தது. இதையடுத்து 'டாஸ்' கூட போடாத நிலையில் போட்டியை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர்.
20 மாதங்களுக்கு பிறகு வெலிங்டனில் நடக்க இருந்த சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்டதால், ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மழையால் இந்த போட்டி தொடர் 2 ஆட்டங்கள் கொண்டதாக குறைந்து இருக்கிறது.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு நடக்கிறது.
போட்டி ரத்தான பிறகு இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கருத்து தெரிவிக்கையில், 'நியூசிலாந்து ஒரு சிறந்த நாடு. விளையாடுவதற்கு அற்புதமாக இடமாகும். போட்டிக்காக நிறைய மக்கள் சீக்கிரமாகவே வந்து இருந்தனர். நாங்களும் களம் இறங்குவதற்கு உற்சாகமாக இருந்தோம். துரதிருஷ்டவசமாக இந்த ஆட்டத்தில் ஆடும் வாய்ப்பு எங்களுக்கு கிட்டவில்லை. இதுபோன்று நடப்பதை தொழில்முறை வீரர்களான நாங்கள் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும் ' என்றார்.