டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக 6வது பவுலர் பிரச்சனையை இந்திய அணி சரி செய்ய வேண்டும்- பார்த்தீவ் படேல்
|தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணியின் 5 முதன்மை பவுலர்களும் தடுமாறிக் கொண்டிருந்தபோது 6வது பவுலராக யாரையுமே சூர்யகுமார் யாதவ் பயன்படுத்தவில்லை.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
அதன்பின் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டிஎல்எஸ் முறையில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் மழையால் 15 ஓவரில் 152 ரன்கள் தேவை என்ற இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கி 13.5 ஓவரிலேயே வெற்றி பெற்றனர். இந்திய அணியில் மற்ற பவுலர்களை காட்டிலும் அர்ஷ்தீப் சிங் 2 ஓவர்களில் 31 ரன்களை வழங்கி தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் 5 முதன்மை பவுலர்களும் தடுமாறிக் கொண்டிருந்தபோது 6வது பவுலராக யாரையுமே சூர்யகுமார் யாதவ் பயன்படுத்தவில்லை. கடந்த ஆஸ்திரேலிய தொடரிலும் 6வது பவுலராக பயன்படுத்துவதற்கு தகுதியான பகுதி நேர பவுலர் இல்லாமல் இந்திய அணி தடுமாறியது.
இந்நிலையில் 2024 டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக 6வது பவுலர் பிரச்சனையை இந்திய அணி சரி செய்ய வேண்டுமென பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக 6வது பவுலர் பிரச்சனையை இந்திய அணி சரி செய்ய வேண்டும். அதாவது உங்களுடைய முதன்மை பவுலர்கள் ரன்களை கொடுக்கும்போது நிலைமையை சமாளிக்க 6வது பவுலர் அவசியம். எடுத்துக்காட்டாக இன்றைய போட்டியில் அர்ஷ்தீப் 2 ஓவர்களில் 31 ரன்களை வாரி வழங்கினார். உலகக்கோப்பை தொடரில் இது போன்ற சூழ்நிலைகளில் 6வது பவுலர் இல்லாமல் உங்களால் இலக்கை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்" என்று கூறினார்.