< Back
கிரிக்கெட்
இந்தியா சூப்பர் 8 சுற்றில் அக்சருக்கு பதிலாக அந்த வீரரை இறக்கலாம் - சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர்

image courtesy: PTI

கிரிக்கெட்

இந்தியா சூப்பர் 8 சுற்றில் அக்சருக்கு பதிலாக அந்த வீரரை இறக்கலாம் - சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர்

தினத்தந்தி
|
18 Jun 2024 7:29 PM IST

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை நிச்சயம் இந்திய அணி செல்லும் என்று ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

வெலிங்டன்,

கிரிக்கெட் ரசிகர்களை எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று நாளை ஆரம்பமாக உள்ளது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்குள் கம்பீரமாக அடியெடுத்து வைத்துள்ளது.

சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வரும் 20-ம் தேதி எதிர்கொள்கிறது. இதனையடுத்து 22-ம் தேதி வங்காளதேசத்தையும், 24-ம் தேதி ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்கிறது.

முன்னதாக இந்த தொடரில் வெற்றி பெறப்போகும் அணி குறித்து பல முன்னாள் வீரர்கள் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெமிங் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை நிச்சயம் இந்திய அணி செல்லும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில்,

"அமெரிக்க ஆடுகளங்களை தாண்டி வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகம் அதிகம் இருக்கும். எனவே இந்திய அணி குல்தீப் யாதவை அணிக்குள் கொண்டு வர வேண்டும். ஒரே மாதிரியான வீரர்களை அணியில் வைத்துக்கொண்டு இந்தியா வீணடிக்காது என்று நினைக்கிறேன். ஏனெனில் ஜடேஜா மற்றும் சான்ட்னர் ஆகியோர் ஒரே மாதிரியான பந்துவீச்சாளர்கள். அவர்களைப் போன்றே அக்சர் படேலும் செயல்பட கூடியவர் எனவே அவருக்கு பதிலாக குல்தீப் யாதவை பயன்படுத்தலாம்.

ஜடேஜா எப்பொழுதுமே ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்டு எதிரணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட கூடியவர். எனவே அவரை இந்திய அணி சிறப்பாக கையாளும் அதே போன்று இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்துவீச முடியாது என்ற கருத்தை நான் எப்போதும் ஏற்பவன் கிடையாது. எந்த பந்துவீச்சாளர் வேண்டுமானாலும் எந்த ஒரு வீரருக்கு எதிராகவும் சிறப்பாக பந்துவீக்கலாம்.

அன்றைய நாளில் பவுலர்களின் பலம் எவ்வாறு இருக்கிறதோ அதனைப் பொறுத்துதான் போட்டி அமையும். என்னை கேட்டால் நிச்சயம் இந்திய அணி தற்போது உள்ள வீரர்களின் பலத்தை வைத்து இறுதி போட்டி வரை செல்லும். இந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாகவே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இறுதிப்போட்டிக்கு இந்திய அணி செல்லும் பட்சத்தில் எப்படி விளையாடுகிறதோ அதை பொறுத்து வெற்றி தோல்வி அமையும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்