ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி: இன்று 2-வது ஆட்டம் நடக்கிறது
|ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி இந்தூரில் இன்று நடைபெறும் 2-வது ஒருநாள் போட்டியில் களம் இறங்குகிறது.
இந்தூர்,
இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் மொகாலியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
முதல் 2 ஆட்டங்களில் கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதால் லோகேஷ் ராகுல் தலைமையில் களம் இறங்கிய இந்திய அணி 276 ரன்னில் ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்தியதுடன், வெற்றி இலக்கை 6 பந்துகள் மீதம் வைத்து எட்டிப்பிடித்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில் ஆகியோர் அரைசதம் அடித்து நல்ல அடித்தளம் அமைத்தனர்.
ஒருநாள் போட்டியில் ரன் எடுக்க நீண்ட நாட்களாக தடுமாறி வந்த அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்தார். லோகேஷ் ராகுல் ஆட்டம் இழக்காமல் அரைசதம் விளாசினார். முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பிய ஸ்ரேயாஸ் அய்யர் 3 ரன்னில் ரன்-அவுட் ஆனதால் தனது உடல் தகுதியை நிரூபிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்.
முகமது ஷமி
பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 19 மாத இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குர் 78 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. அவர் பந்து வீச்சில் ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். கடந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்ட முகமது சிராஜ் களம் இறங்கினால் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் (52 ரன்கள்) நல்ல பார்மில் தொடருகிறார். மிட்செல் மார்ஷ் எதிர்பார்த்தபடி ஆடவில்லை. ஸ்டீவன் சுமித், மார்னஸ் லபுஸ்சேன் ஆகியோர் தங்களுக்கு கிடைத்த நல்ல தொடக்கத்தை பெரிய இன்னிங்சாக மாற்ற தவறியது அந்த அணியின் ரன் வேகத்தை பாதித்தது. பந்து வீச்சில் ஆடம் ஜம்பா, கம்மின்ஸ், சீன் அப்போட் தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை. ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஒருசேர எழுச்சி காண வேண்டியது தேவையானதாகும்.
கடந்த ஆட்டத்தில் இடம் பெறாத முன்னணி வீரர்களான ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல், வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இன்னும் முழு உடல் தகுதியை எட்டாததால் இன்றைய ஆட்டத்திலும் ஆடமாட்டார்கள் என்று தெரிகிறது. ஹேசில்வுட் களம் திரும்புவதால் மார்கஸ் ஸ்டோனிஸ் இடத்தை இழக்க நேரிடும்.
தொடரை வெல்லுமா இந்தியா
முதலாவது ஆட்டத்தில் வென்றதன் மூலம் ஒருநாள் போட்டி தரவரிசையில் 'நம்பர் ஒன்' இடத்துக்கு முன்னேறிய இந்தியா மூன்று வடிவிலான (டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர்) போட்டியிலும் ஒரே சமயத்தில் முதலிடம் வகித்த இரண்டாவது அணி என்ற பெருமையை தனதாக்கியது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை வெல்வதுடன், 'நம்பர் ஒன்' அணி என்ற அந்தஸ்துடன் உலகக் கோப்பை போட்டிக்குள் நுழைய முடியும். எனவே இந்திய அணி இந்த ஆட்டத்தில் வென்று தொடரை கைப்பற்றுவதுடன் 'நம்பர் ஒன்' இடத்தில் நீடிக்க எல்லா வகையிலும் முனைப்பு காட்டும். அதேநேரத்தில் தொடரை இழக்காமல் இருக்க ஆஸ்திரேலிய அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்தூர் ஸ்டேடியம் இந்திய அணிக்கு ராசியானது. இங்கு 6 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கும் இந்திய அணி அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி கண்டு இருக்கிறது. கடைசியாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 385 ரன்கள் குவித்தது. எனவே இந்த ஆட்டத்திலும் ஆடுகளம் ரன் குவிப்புக்கு அனுகூலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மழை பெய்ய வாய்ப்பு
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை 147 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 82-ல் ஆஸ்திரேலியாவும், 55-ல் இந்தியாவும் வெற்றி பெற்று இருக்கின்றன. 10 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது.
இந்தூரில் இன்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் காலை மற்றும் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
பகல் 1.30 மணிக்கு...
இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல் (கேப்டன்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரித் பும்ரா அல்லது முகமது சிராஜ், முகமது ஷமி.
ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், மார்னஸ் லபுஸ்சேன், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்லிஸ் அல்லது ஆரோன் ஹார்டி, மேத்யூ ஷார்ட், கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அப்போட், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.
பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18, கலர்ஸ் தமிழ் ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா செயலியிலும் பார்க்கலாம்.