மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் இந்தியா நம்பர் 1 அணியாக வர வாய்ப்பு - வாசிம் ஜாபர்
|தற்போதைய நிலையில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் இந்தியா நம்பர் 1 அணியாக வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது என வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.
மும்பை,
இந்திய அணி கடந்த டி20 உலககோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதில் தோல்வி அடைந்தது. அதற்கடுத்து நடந்து வரும் இரு தரப்பு தொடர்களில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த வருடம் இந்தியாவில் 50 ஓவர் உலககோப்பை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது. இது முடிந்த பின்னர் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. தற்போது இந்திய அணி ஒருநாள் அணிகளின் தரவரிசையில் 3வது இடத்திலும், டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் 2ம் இடத்திலும், டி20 அணிகளின் தரவரிசையில் முதல் இடத்திலும் உள்ளது.
இந்நிலையில், இந்திய அணிக்கு அனைத்து விதமான கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்திற்கு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது என இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இந்திய அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தரவரிசையிலும் முதல் இடத்திற்கு வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த சமயத்தில் இந்திய அணி ஆடும் விதத்தை பார்க்கையில் அருமையாக உள்ளது. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா நம்பர் 1 அணியாக இருக்கும் என நினைக்கிறேன்.
நியூசிலாந்து அணியினர் இந்திய அணிக்கு எதிரான தங்களது செயல்பாட்டால் மிகுந்த ஏமாற்றமடைவார்கள். நியூசிலாந்து ஒருநாள் தரவரிசையில் உலகின் நம்பர் 1 அணியாக இருந்தது. நியூசிலாந்து மீண்டும் கடுமையாக போராட வேண்டும்.
இந்தியாவுக்கு எதிரான தொடரில் பிரேஸ்வெல்லின் பங்களிப்பை தவிர்த்து பார்த்தால் நடந்து முடிந்த இரு போட்டிகளிலும் நியூசிலாந்தின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டும் மோசமாக உள்ளது. அவர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் இல்லையெனில் அவர்கள் தொடரை 3-0 என இழக்க நேரிடும், அது அவர்களுக்கு நல்ல அறிகுறியாக இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய அணி நாளை நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வென்றால் ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 அணியாக மாறும். டி20 தரவரிசையில் இந்தியா நம்பர் 1 அணியாக உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பெற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்ற வேண்டும்.