< Back
கிரிக்கெட்
இந்திய தேர்வு குழு தலைவர் அகர்கர் வெஸ்ட் இண்டீஸ் பயணம்: உலகக் கோப்பை அணி குறித்து கேப்டனுடன் ஆலோசனை
கிரிக்கெட்

இந்திய தேர்வு குழு தலைவர் அகர்கர் வெஸ்ட் இண்டீஸ் பயணம்: உலகக் கோப்பை அணி குறித்து கேப்டனுடன் ஆலோசனை

தினத்தந்தி
|
19 July 2023 2:14 AM IST

வெஸ்ட் இண்டீசுக்கு செல்லும் இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் அகர்கர், உலகக் கோப்பை போட்டி அணி குறித்து கேப்டனுடன் ஆலோசிக்கிறார்.

மும்பை,

தேர்வு குழு தலைவர் அகர்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் கடந்த 4-ந்தேதி நியமிக்கப்பட்டார். இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் விளையாடி வருவதால் கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை சந்திக்க அகர்கருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அகர்கர் வெஸ்ட் இண்டீசுக்கு செல்ல இருக்கிறார். 'தேர்வு குழு உறுப்பினர் சலில் அங்கோலா தற்போது வெஸ்ட் இண்டீசில் உள்ளார். டெஸ்ட் தொடர் முடிந்ததும் அவர் தாயகம் திரும்பி விடுவார். அதன் பிறகு வெள்ளைநிற பந்து கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன்பாக அகர்கர் வெஸ்ட் இண்டீசுக்கு சென்று அணியுடன் இணைய உள்ளார்' என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

10 அணிகள் இடையிலான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந்தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ந்தேதி சென்னையில் சந்திக்கிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முதற்கட்டமாக 20 வீரர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அது பற்றியும், உலகக் கோப்பை போட்டிக்கான வியூகங்கள் குறித்தும் அகர்கர், கேப்டன் ரோகித் மற்றும் பயிற்சியாளர் டிராவிட்டுடன் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார். வீரர்களின் காயம், பணிச்சுமையை எப்படி கையாள்வது என்பது குறித்தும் விவாதிக்கிறார்.

பும்ரா விவகாரம்

அத்துடன் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் உடல்தகுதி குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. முதுகில் ஏற்பட்ட காயத்துக்கு கடந்த ஏப்ரலில் ஆபரேஷன் செய்து கொண்ட பும்ரா இப்போது அதில் இருந்து மீண்டு வலை பயிற்சியை தொடங்கி விட்டார்.

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்ததும் அடுத்த மாதம் அயர்லாந்துக்கு சென்று 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டிக்கு பும்ரா தயாராக இருப்பாரா?, அதற்குள் தேசிய கிரிக்கெட் அகாடமியின் மருத்துவ கமிட்டியிடம் இருந்து உடல்தகுதி அறிக்கை கிடைக்குமா? என்பது ஆலோசனையில் முக்கிய அம்சமாக இருக்கும். மேலும், எதிர்கால இந்திய அணியை வலுப்படுத்த இளம் வீரர்களை பயன்படுத்துவதற்கான திட்டமிடலும் இடம் பெறுகிறது.

மேலும் செய்திகள்