இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: அஸ்வின், பும்ரா இல்லை அவர்தான் சிறந்த பவுலர் - சஞ்சய் மஞ்ரேக்கர்
|இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன், பவுலர் யார் என்பது குறித்து சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
தர்மசாலா,
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன், பவுலர் யார் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'இந்த தொடரில் இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக ஜெய்ஸ்வால்தான் செயல்பட்டுள்ளார். இளம் வீரரான ஜெய்ஸ்வால் இந்த தொடரில் 712 ரன்களை குவித்திருக்கிறார். மேலும் இந்த தொடரில் அவர் மட்டும் 26 சிக்சர்களை அடித்து இருக்கிறார்.
பும்ரா, அஸ்வின் போன்ற வீரர்கள் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். ஆனால் குல்தீப்தான் சிறந்த பவுலர். முதல் போட்டியில் விளையாடாத அவர் 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து அணியில் தொடர்ந்து இடம் பிடித்தார். 4 போட்டிகளில் விளையாடிய குல்தீப், அதில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். தர்மசாலாவில் நடைபெற்ற 5-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 5-விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்'என்று கூறினார்.