இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: கடைசி போட்டியை நேரில் காண இருக்கும் பிரதமர் மோடி..?
|ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.
நாக்பூர் ,
4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வருகிற 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் பிப்ரவரி 17-21 வரை டெல்லியிலும், 3-வது டெஸ்ட் மார்ச் 1 முதல் 5 வரை தர்மசாலாவிலும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 9 முதல் 13 வரை அகமதாபாத்திலும் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் மார்ச் 17, 19 மற்றும் 22-ந்தேதிகளில் மும்பை, விசாகப்பட்டினம், சென்னை ஆகிய இடங்களில் நடக்கிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்திலும், இந்திய அணி 2வது இடத்திலும் உள்ளது.
இந்தியா இறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் ஆஸ்திரேலியாவிடம் வெற்றி பெற்றே தீர வேண்டும். இதற்காக இந்திய அணி நாக்பூரிலும், ஆஸ்திரேலிய அணி பெங்களூருவிலும் பயிற்சி முகாம்களை தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் இந்திய வீரர்கள் இன்று பயிற்சியை தொடங்கி உள்ளனர். வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இத்தொடர் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இரு அணிகளும் மோதும் கடைசி டெஸ்ட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி நேரில் கண்டுகளிக்கவுள்ளார். இவருடன் சேர்ந்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசும் போட்டியை நேரில் காண உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அகமதாபாத் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டதில் இருந்து ஒருமுறை கூட அவர் போட்டியை காண வரவில்லை. முதல்முறையாக இந்த பிரமாண்ட போட்டியை காண வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.