ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி 289 ரன்கள் சேர்ப்பு: இன்று 4-வது நாள் ஆட்டம்
|ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் சதம் அடித்தார்.
ஆமதாபாத்,
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 480 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. உஸ்மான் கவாஜா (180 ரன்கள்), கேமரூன் கிரீன் (114 ரன்கள்) சதம் அடித்தனர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்து இருந்தது. கேப்டன் ரோகித் சர்மா 17 ரன்னுடனும், சுப்மன் கில் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
ரோகித் சர்மா 35 ரன்னில் அவுட்
நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. ரோகித் சர்மா, சுப்மன் கில் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஆகியோர் பந்து வீச்சை தொடுத்தனர். பேட்டிங்குக்கு அனுகூலமாக ஆடுகளம் தென்பட்டாலும், ஆஸ்திரேலிய அணியினர் துல்லியமான பந்து வீச்சு மற்றும் பீல்டிங் மூலம் ரன்கள் கசிவதை கச்சிதமாக கட்டுப்படுத்தி நெருக்கடி கொடுத்தனர். இந்திய அணியினர் விக்கெட்டை பறிகொடுத்து விடக்கூடாது என்ற எண்ணத்துடன் நிதானமாக ஆடினார்கள்.
தொடக்கத்தில் மெதுவாக ஆடிய சுப்மன் கில், மிட்செல் ஸ்டார்க் வீசிய ஒரு ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசினார். இதேபோல் ரோகித் சர்மா ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார். அணியின் ஸ்கோர் 74 ரன்னை எட்டிய போது ரோகித் சர்மா 35 ரன்னில் (58 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) சுழற்பந்து வீச்சாளர் குனேமேன் பந்து வீச்சில் லபுஸ்சேனிடம் எளிதாக கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார்.
இதைத்தொடர்ந்து புஜாரா, சுப்மன் கில்லுடன் இணைந்தார். இருவரும் நிதானமாகவும், அதேநேரத்தில் ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு விரட்டியும் ரன் சேர்த்தனர். மதிய உணவு இடைவேளையில் இருந்து தேனீர் நேரத்துக்கு முன்பாக ஒரு கட்டத்தில் தொடர்ந்து 16 ஓவர்களில் இந்திய அணியினர் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை.
சுப்மன் கில் சதம்
அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில், டாட் மர்பி பந்து வீச்சில் பவுண்டரி விளாசி தனது சதத்தை (194 பந்துகளில்) பூர்த்தி செய்தார். அவர் அடித்த 2-வது டெஸ்ட் சதம் இதுவாகும். அதே ஓவரில் புஜாரா (42 ரன்கள், 121 பந்து, 3 பவுண்டரி) டாட் மர்பி பந்து வீச்சை தடுத்து ஆட முயற்சிக்கையில் எல்.பி.டபிள்யூ. ஆனார். நடுவரின் முடிவை எதிர்த்து அவர் செய்த அப்பீல் வீணானது. 2-வது விக்கெட்டுக்கு சுப்மன் கில்-புஜாரா இணை 113 ரன்கள் சேர்த்தது.
இதனையடுத்து விராட்கோலி களம் புகுந்தார். நிலைத்து நின்று சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 128 ரன்னில் (235 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்) நாதன் லயன் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்தார். இதனை எதிர்த்து சுப்மன் கில் செய்த அப்பீலுக்கு பலன் கிடைக்கவில்லை. டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும்.
இந்தியா 3 விக்கெட்டுக்கு 289 ரன்கள்
4-வது விக்கெட்டுக்கு ரவீந்திர ஜடேஜா, விராட்கோலியுடன் ஜோடி சேர்ந்தார். மிட்செல் ஸ்டார்க், லயன், மர்பி பந்து வீச்சில் பவுண்டரிகள் விளாசி ரசிகர்களை மகிழ்வித்த விராட்கோலி 107 பந்துகளில் அரைசத்தை எட்டினார். அவர் அடித்த 29-வது அரைசதம் இதுவாகும். டெஸ்ட் போட்டியில் 14 மாதங்களுக்கு பிறகு விராட்கோலி அரைசதத்தை எட்டியது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 99 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. விராட்கோலி 59 ரன்களுடனும் (128 பந்து, 5 பவுண்டரி), ரவீந்திர ஜடேஜா 16 ரன்களுடனும் (54 பந்து, ஒரு சிக்சர்) ஆட்டம் இழக்காமல் உள்ளனர். ஆஸ்திரேலியா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் நாதன் லயன் , குனேமேன், டாட் மர்பி தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெறும். இந்தியா இன்னும் 191 ரன்கள் பின்தங்கி இருக்கிறது.
விராட்கோலி சாதனை
* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய வீரர் விராட்கோலி 59 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருக்கிறார். அவர் நேற்று 42 ரன்னை எட்டிய போது சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் 4 ஆயிரம் ரன்களை கடந்த 5-வது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். ஏற்கனவே இந்தியாவின் தெண்டுல்கர் (7,216 ரன்கள்), ராகுல் டிராவிட் (5,598), கவாஸ்கர் (5,067), ஷேவாக் (4,656) ஆகியோர் முறையே இந்த பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளனர்.
* ஆமதாபாத் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 35 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவர் மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் பவுண்டரி விளாசி 24 ரன்னை எட்டிய போது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் (டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் போட்டிகளை சேர்த்து) 17,000 ரன்களை கடந்த 7-வது இந்திய வீரர் என்ற சிறப்பை தனதாக்கினார். ஏற்கனவே இந்தியர்களில் தெண்டுல்கர், விராட்கோலி, டிராவிட், கங்குலி, டோனி, ஷேவாக் ஆகியோர் முதல் 6 இடங்களில் இருக்கின்றனர்.