ஆஸி. மீடியாக்கள் கூறியதுபோல் ஜடேஜா பந்தை சேதப்படுத்தினாரா..! உண்மை நிலவரம் என்ன..?
|நேற்றைய போட்டியில் ஜடேஜா பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய மீடியாக்கள் குற்றம் சாட்டியுள்ளது.
நாக்பூர்,
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் போட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து போட்டியின் 2ம் நாளான இன்று இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்த நிலையில், ஜடேஜா மீது ஆஸ்திரேலிய மீடியாக்கள் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான வெளியான ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், போட்டியின் போது ஜடேஜாவும், ரோகித் சர்மாவும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பந்தை வைத்திருந்த ஜடேஜா, தனது விரலில் ஏதோ ஒன்றை தேய்க்கிறார். முகமது சிராஜிடம் இருந்து அதனை ஜடேஜா வாங்கி தனதுவிரலில் தேய்ப்பது வீடியோவின் மூலம் தெரிகிறது.
இதனை ஆஸ்திரேலிய மீடியாக்கள், ஜடேஜா ஒருவகை கிரீமை கொண்டு பந்தை சேதப்படுத்தியதாக தெரிவித்துள்ளது. மைக்கேல் வாகன், ஸ்டீவ் வாக், டிம் பெயின் போன்ற முன்னாள் வீரர்களும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய மீடியாக்களின் கருத்தை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மறுத்துள்ளது. இதுகுறித்து அணி நிர்வாகம் கூறுகையில், ஜடேஜா, தனது விரலில் வலி நிவாரணிக்காக பயன்படுத்தப்படும் மருந்தையே பயன்படுத்தினார் என்றும், அவர் பந்தை சேதப்படுத்தவில்லை என்றும் தெரிவித்தது.
வீடியோவில் அவர், விரலில் மட்டுமே அதனை தேய்ப்பதும், பந்தை சேதப்படுத்தாததும் தெளிவாக தெரிகிறது. இந்த விளக்கத்தை கேட்ட நடுவர்கள் பின் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.