
Image Tweeted By @ICC
ஆஸ்திரேலிய அணிக்காக டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம்: கேமரூன் கிரீன் புதிய சாதனை

ஆஸ்திரேலியாவுக்காக அதிவேக அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியலில் கேமரூன் கிரீன் இணைந்துள்ளார்.
ஐதராபாத்,
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வந்தது. டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தநிலையில் இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அதிரடியால் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் கேமரூன் கிரீன் 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்காக அதிவேக அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியலில் இவர் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
முதல் இடத்தில் வார்னர் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இருவரும் (18 பந்துகள்) உள்ளனர். அதே போல் வார்னர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஒருமுறை 19 பந்துகளில் அரைசதம் அடித்து முதல் இரண்டு இடங்களிலும் உள்ளார். தற்போது இந்த பட்டியலில் இணைந்துள்ள கேமரூன் கிரீன் வார்னர் உடன் 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார்.