சூழலுக்கு ஏற்ப விளையாட வேண்டும், இல்லையெனில்.... இங்கிலாந்தை கிண்டல் செய்த டி வில்லியர்ஸ்
|இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
ஐதராபாத்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்சை விளையாடத் தொடங்கியது. ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 76 ரன்கள் அடிக்க முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்திருந்தது. இது இங்கிலாந்து அணியின் ஸ்கோரை விட 127 ரன்கள்தான் குறைவாகும்.
இந்த நிலையில் இந்த ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான் டி வில்லியர்ஸ், 'இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்சின் தொடக்கத்தில் ஒரு ஓவருக்கு எட்டு அல்லது ஒன்பது ரன்களை எடுத்து அதிரடியான தொடக்கத்தை கொடுத்திருக்கிறார்கள். இதனை நீங்கள் புத்திசாலித்தனம், தைரியம் அல்லது பேஸ்பால் என்று எல்லாம் அழைக்க தேவையில்லை. சூழலுக்கு தகுந்தாற்போல் இந்திய அணி வீரர்கள் விளையாடியிருக்கிறார்கள்.
டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை எந்த சூழலில் எப்படி விளையாட வேண்டும். எப்படி ஆடினால் நீங்கள் முன்னிலை பெறுவீர்கள் என்பதில்தான் போட்டியின் மகிமையே இருக்கிறது. போட்டியின் சூழல் மாறினால் அதற்கு ஏற்றாற்போல் நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் உங்களால் சூழலைப் புரிந்து கொண்டு விளையாட முடியவில்லை என்றால் அது நிச்சயம் உங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். நீங்கள் பேஸ்பால் அல்லது எந்த மாதிரி பாலை விளையாடினாலும் சரி உங்களுக்கு அது நன்மையை கொடுக்காது' என்று இங்கிலாந்து அணியின் பேஸ்பால் யுக்தியை மறைமுகமாக டி வில்லியர்ஸ் கிண்டலடித்துள்ளார்.