இன்னும் ஆறு மாதங்களில் அவர் நிச்சயம் இந்திய அணியில் விளையாடுவார் - இளம் வீரரை பாராட்டிய யுவராஜ் சிங்
|அபிஷேக் ஷர்மா இன்னும் ஆறு மாதங்களில் இந்திய அணிக்காக விளையாடுவதற்கு தயாராகிவிடுவார் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
ஐதராபாத்,
இந்தியாவில் நடைபெற்று வரும் 17-வது ஐ.பி.எல். சீசனில் முன்னாள் சாம்பியன் ஆன சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சன்ரைசர்ஸ் அணி, நடப்பு சீசனில் புதிய கேப்டன் கம்மின்ஸ் தலைமையில் பட்டையை கிளப்பி வருகிறது.
நடப்பு சீசனில் சன்ரைசர்ஸ் அணியில் டிராவிஸ் ஹெட், கிளாசன், மார்க்ரம் போன்ற வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்திருந்தாலும் இந்தியாவை சேர்ந்த அபிஷேக் ஷர்மா ஒவ்வொரு போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் பவர் பிளேயின் போதே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரியையும், சிக்சரையும் விளாசி வருகிறார்.
இந்நிலையில் அபிஷேக் சர்மா குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் கூறுகையில்:-
அபிஷேக் ஷர்மா இன்னும் ஆறு மாதங்களில் இந்திய அணிக்காக விளையாடுவதற்கு தயாராகிவிடுவார். தற்போதைய நிலையில் அவரை டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட வைக்க முடியாது. ஆனால் இன்னும் ஆறு மாதங்கள் அவர் சரியான பயிற்சியை மேற்கொள்ளும் பட்சத்தில் இந்திய அணிக்காக விளையாட முற்றிலுமாக தயாராகிவிடுவார். அவருடைய பேட்டிங் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் எல்லாம் மிகச்சிறப்பாக இருக்கிறது. ஆனால் அவரிடம் இருந்து இன்னும் மிகப்பெரிய ஸ்கோர் வரவில்லை.
அவருடைய அதிரடி இந்திய அணிக்கு நிச்சயம் தேவை என்றாலும் பெரிய ஸ்கோரை அடிக்கும் திறனையும் அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்த ஒரு விசயத்தில் அவர் கவனம் செலுத்தி சிறப்பாக செயல்பட்டு விட்டால் நிச்சயம் அவர் அடுத்த ஆறு மாதத்தில் இந்திய அணியில் விளையாடுவார். அதோடு பெரிய பெரிய சிக்சர்களை அடிக்கும் திறனை கொண்டுள்ள அவர் சிங்கிள் விளையாடவும் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி விளையாடினால் தான் போட்டியின் சூழலுக்கு ஏற்ப நம்மை தக்கவைத்துக் கொள்ள முடியும். உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு மத்தியில் விளையாடும்போது இன்னும் அவருக்கு மிகப்பெரிய அனுபவம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.