எஸ்.ஏ.20 ஓவர் லீக் தொடரின் அடுத்த சீசனில் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை...? - வெளியான தகவல்
|ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென்ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி,
ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென்ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இந்த 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.
இந்த தொடரில் இதுவரை இரண்டு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அந்த இரு சீசன்களிலும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த தொடரின் 3வது சீசன் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த தொடரின் அடுத்த சீசனில் தற்போது ஐ.பி.எல் தொடரில் பின்பற்றப்படும் இம்பேக்ட் பிளேயர் விதிமுறையை அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக அக்டோபர் 1ம் தேதி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) மாற்றம் செய்யப்பட்ட விதிமுறைகள், புதிய விதிமுறைகள் குறித்த அறிவிப்பை வெளியிடும்.
இந்த அறிவிப்பு வெளியான பின்னர் தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக்கின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் போது இம்பேக்ட் பிளேயர் விதிமுறையை அறிமுகப்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.