போட்டிக்கு பின்னர் பொதுவாக நான் அழுபவன் அல்ல: தொடர் நாயகன் பும்ரா பேட்டி
|உங்களுடைய அணியை வெற்றிக்கு கொண்டு செல்வதில் கிடைக்கும் உணர்வு வேறெதிலும் இருக்காது என தொடர் நாயகன் விருது வென்ற பும்ரா பேட்டியில் கூறியுள்ளார்.
பார்படாஸ்,
9-வது டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இன்று இந்திய மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. தொடர்ந்து, 177 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி விளையாடியது.
எனினும், 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு அந்த அணி 169 ரன்களே எடுத்தது. இதனால், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது. பிரதமர் மோடியும், இந்திய கிரிக்கெட் அணியால் நாம் பெருமை கொள்கிறோம் என தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.
இந்த தொடரின் ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதேபோன்று தொடர் நாயகனாக ஜஸ்பிரித் பும்ரா அறிவிக்கப்பட்டு உள்ளார். பும்ரா பேசும்போது, பொதுவாக என்னுடைய உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்திருக்க முயல்பவன் நான். எனது வேலையை செய்து முடித்து விட்டு சென்று விடுவேன்.
ஆனால், இன்று... கூறுவதற்கு எனக்கு வார்த்தைகள் இல்லை என்றார். பொதுவாக, ஒரு போட்டி முடிந்ததும் நான் அழுவது இல்லை. ஆனால், என்னை மீறி உணர்ச்சிகள் பொங்குகின்றன. நாங்கள் சிக்கலில் இருந்தோம். ஆனால், அந்த நிலையில் இருந்து மீண்டு வெற்றியடைந்தோம்.
என்னுடைய குடும்பமும் உடன் உள்ளது. இதுபோன்ற போட்டிகளில் உங்களுடைய அணியை வெற்றிக்கு கொண்டு செல்வதில் கிடைக்கும் உணர்வு வேறெதிலும் இருக்காது. இதனை நன்றாகவே நான் உணர்ந்தேன். என்னை ஒரு வளையத்திற்குள் வைத்திருக்கு முயன்றேன். வேறெந்த பெரிய சிந்தனையும் இல்லை.
வெற்றிக்கான நாட்கள் வரும்போது, அதனை நீங்கள் செய்து முடிக்க வேண்டும். இந்த போட்டி தொடரில் அதனை நான் தெளிவாக உணர்ந்தேன். எனது சிந்தனை எப்போதும், ஒரு பந்து மற்றும் ஒரு ஓவர் என்பதில் இருந்தது. அதனை விட்டு வேறெதிலும் நான் கவனம் செலுத்தவில்லை என அவர் கூறியுள்ளார்.