< Back
கிரிக்கெட்
என்னுடைய பந்துவீச்சு செயல்பாட்டில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் - அர்ஷ்தீப் சிங் பேட்டி

image courtesy: AFP

கிரிக்கெட்

என்னுடைய பந்துவீச்சு செயல்பாட்டில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் - அர்ஷ்தீப் சிங் பேட்டி

தினத்தந்தி
|
13 Jun 2024 4:44 AM IST

அமெரிக்காவுக்கு எதிராக வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

நியூயார்க்,

9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 'ஏ' பிரிவு ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, அமெரிக்காவை சந்தித்தது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய அமெரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. அமெரிக்கா தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் குமார் 27 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 111 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 111 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் சூர்யகுமார் யாதவ் 50 ரன்கள் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, என்னுடைய பந்துவீச்சு செயல்பாட்டில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த இரண்டு போட்டிகளில் நான் நிறைய ரன்கள் கொடுத்து விட்டேன். அது மகிழ்ச்சியாக இல்லை.

என்னுடைய அணி எப்பொழுதும் எனக்கு நம்பிக்கையை கொடுத்து என்னை ஆதரிக்கிறது. எனவே எனது அணிக்கு நான் ஏதாவது செய்ய நினைத்தேன்.இந்த ஆடுகளம் வேகப் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. இப்படியான விக்கெட்டில் திட்டம் எளிமையானது. பந்தை ஆடுகளத்தில் அடித்து வீச வேண்டும். மற்றதை பந்து பார்த்துக் கொள்ளும்.

மேலும் கடினமான லென்த்தில் வீச வேண்டும் என்பதுதான் திட்டமாக இருந்தது. எங்கள் பேட்ஸ்மேன்களும் ரன் எடுக்க சிரமப்பட்டனர். எங்களுடைய பந்துவீச்சாளர்கள் அனைவருமே மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். நாங்கள் அடுத்த சுற்றிலும் இதையே செய்ய நினைத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்