நான் நலமுடன் இருக்கிறேன் - உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வினோத் காம்ப்ளி
|சமீபத்தில் வினோத் காம்ப்ளி நடக்க சிரமப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி. இவர் விளையாடிய கால கட்டத்தில் சிறந்த வீரராக போற்றப்பட்டார். ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பரும் ஆவார். இந்திய அணிக்காக 17 டெஸ்ட் போட்டிகளிலும் 104 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். முதல் தர கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள வினோத் காம்ப்ளி, அதில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.
இதனிடையே சமீபத்தில் வினோத் காம்ப்ளி நடக்க சிரமப்படும் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் பைக்கின் மீது சாய்ந்தபடி இருக்கும் அவரை சிலர் தாங்கிப் பிடித்தபடி அழைத்து செல்லும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இதனைக்கண்ட ரசிகர்கள் வினோத் காம்ப்ளியின் நிலையை பார்த்து வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவரது வீடியோ வைரலாகியது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் நன்றாக இருக்கிறேன். சமூக ஊடகங்களை நம்ப வேண்டாம். தற்போது கூட களத்தில் இறங்கி பேட்டிங் செய்யும் அளவிற்கு நான் உடற்பகுதியுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.