< Back
கிரிக்கெட்
நாங்கள் எங்கள் திறமையை சரியாக பயன்படுத்தினால் எங்களை வீழ்த்துவது மிகவும் கடினம் - ரஷித் கான்

Image Courtesy: @ACBofficials

கிரிக்கெட்

நாங்கள் எங்கள் திறமையை சரியாக பயன்படுத்தினால் எங்களை வீழ்த்துவது மிகவும் கடினம் - ரஷித் கான்

தினத்தந்தி
|
8 Jun 2024 11:25 AM IST

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

கயானா ,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 14-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் ஆடின.

இந்த ஆட்டம் வெஸ்ட் இண்டீசில் உள்ள கயானாவில் நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது.

ஆப்கானிஸ்தான் தரப்ப்பில் அதிகபட்சமாக குர்பாஸ் 80 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, பவுல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 75 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் 84 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், பசல்ஹக் பரூக்கி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் அளித்த பேட்டியில் கூறியதாவது,

நியூசிலாந்து போன்ற பெரிய அணிக்கு எதிராக நாங்கள் பெற்ற இந்த வெற்றி மிகவும் சிறப்பானது. இந்த விக்கெட் பேட்டிங் செய்வதற்கு எளிதானது கிடையாது. எங்களின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். பேட் மற்றும் பந்தில் எங்களின் சிறப்பான செயல் திறன் இது. இப்படிப்பட்ட ஒரு அணியை வழிநடத்த நான் பெருமைப்படுகிறேன். நான் மெதுவாக ஆரம்பித்தாலும் எனது செயல் திறன் மகிழ்ச்சி அளிக்கிறது.

நாங்கள் முதல் ஆறு ஓவர்களில் 30 ரன்கள் மட்டும் எடுத்தோம். போட்டியை அடுத்து எப்படி கொண்டு செல்வது என்பது பற்றி பேசினோம். அதுதான் தேவையாகவும் இருந்தது. எங்கள் பந்து வீச்சாளர்கள் திறமையை பயன்படுத்தி பந்து வீசும் பொழுது எங்களுக்கு எதிராக 160 ரன்களை சேசிங் செய்வது கடினம். நாங்கள் எங்கள் திறமையைப் சரியாக பயன்படுத்தினால் எங்களை வீழ்த்துவது மிகவும் கடினம்.

நபி வீசிய இரண்டாவது ஓவர் மிகவும் முக்கியமானது. இப்படியான ஒரு விக்கெட்டில் நாங்கள் நிலையான லைன் அண்ட் லென்த்தில் வீச வேண்டும். மேலும் வெற்றியோ, தோல்வியோ நாம் செய்ய வேண்டிய விஷயங்களை சரியாக செய்ய வேண்டும். முடிவைப்பற்றி நான் எப்பொழுதும் கவலைப்படுவது கிடையாது.

பந்துவீச்சில் எங்களுக்கு பரூக்கி மிகச்சிறந்த தொடக்கத்தை கொடுத்து வருகிறார். இரண்டு போட்டியிலும் அவர் பந்து வீசிய விதம் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் தொடர்ந்து அவர் தன்னுடைய பந்துவீச்சில் பணிபுரிந்தால் அவர் இதைவிட இன்னும் திறமையாக வர முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்