< Back
கிரிக்கெட்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி டிராவில் முடிந்தால் கோப்பை யாருக்கு...?

Image Courtesy: @ICC

கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி டிராவில் முடிந்தால் கோப்பை யாருக்கு...?

தினத்தந்தி
|
7 Jun 2023 6:27 AM IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன.

லண்டன்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இரு ஆண்டுகள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்து புள்ளிப்பட்டியலில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். அந்த வகையில் 2021-ம் ஆண்டு சவுத்தம்டனில் நடந்த முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குரிய காலக்கட்டமாக 2021 முதல் 2023-ம் ஆண்டு வரை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதில் 9 அணிகள் பங்கேற்று உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் மோதின. மொத்தம் 27 தொடர்களில் 69 டெஸ்டுகள் நடத்தப்பட்டன. டெஸ்ட் வெற்றிக்கு 12 புள்ளியும், டிராவுக்கு 4 புள்ளியும் வழங்கப்பட்டன.

இதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 66.67 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தையும், இந்தியா 58.80 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பிடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. 55.56 சதவீத புள்ளிகளுடன் 3-வது இடத்தை பெற்ற ெதன்ஆப்பிரிக்கா மயிரிழையில் வாய்ப்பை இழந்தது. நடப்பு சாம்பியன் நியூசிலாந்து 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் இரு அணிகளுக்கும் வெற்றி, தோல்வி இன்றி டிராவில் முடிந்தால் கோப்பை யாருக்கு கொடுக்கப்படும் என சில முக்கிய தகவல்களை இங்கு பார்க்கலாம்.

* லண்டன் ஓவலில் 1880ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. ஆனால் 143 ஆண்டுகால வரலாற்றில் அங்கு ஜூன் மாதம் டெஸ்ட் நடக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.

* இந்த போட்டிக்கு டியூக்ஸ் வகை பந்து பயன்படுத்தப்படுகிறது.

* வானிலையை பொறுத்தவரை லண்டனில் போட்டிக்குரிய முதல் 3 நாட்களும், கடைசி நாளும் வெயில் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4வது நாளில் பிற்பகலுக்கு பிறகு மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* போட்டி 'டிரா'வில் முடிந்தாலோ அல்லது டையில் முடிந்தாலோ இரு அணிக்கும் கோப்பை கூட்டாக பகிர்ந்து அளிக்கப்படும்.

* டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு 6வது நாள் மாற்று நாளாக (ரிசர்வ் டே) அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிக்குரிய 5 நாட்களில் மோசமான வானிலை மற்றும் மழையால் ஆட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு அதிக நேரம் இழப்பு ஏற்பட்டால் மட்டுமே 6வது நாள் பயன்படுத்தப்படும். முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மழையால் முதல் நாள் ஆட்டம் முழுமையாக ரத்தானதால் 6வது நாளுக்கு போட்டி நகர்ந்தது நினைவு கூரத்தக்கது.

மேலும் செய்திகள்