கொல்கத்தா அணி என்னை வெளியேற்றினால் இந்த அணிக்காக விளையாட விரும்புகிறேன் - ரிங்கு சிங்
|நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
புதுடெல்லி,
நடந்து முடிந்த ஐ.பி.எல் (2024) தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த சில ஐ.பி.எல் தொடர்களில் கொல்கத்தா அணிக்காக அதிரடி ஆல்ரவுண்டர் ரிங்கு சிங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக அவர் இந்திய அணியிலும் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.
இந்நிலையில் 2025-ம் ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்னர் கொல்கத்தா அணி எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும்? எந்தெந்த வீரர்களை வெளியேற்றும்? என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் கொல்கத்தா அணியால் ரிங்கு சிங் நிச்சயம் தக்கவைக்கப்படுவார் என்று தெரிகிறது.
ஆனால், ஒருவேளை ரிங்கு சிங் கொல்கத்தா அணியில் இருந்து வெளியேற்றப்பட்டால் எந்த அணிக்கு சென்று விளையாடுவார்? என்கிற எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில், கொல்கத்தா அணியில் இருந்து வெளியேறினால் இந்த அணிக்காக விளையாட விரும்புகிறேன் என ரிங்கு சிங் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, நான் கொல்கத்தா அணியில் இருந்து வெளியேற்றப்பட்டால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணிக்காக விளையாட விரும்புகிறேன். ஏனெனில், அங்கு விராட் கோலி இருக்கிறார். அவருக்காக அவருடன் இணைந்து விளையாட ஆசை. இவ்வாறு அவர் கூறினார்.