அது நடக்காவிட்டால் எங்கள் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மாட்டோம் - ஹர்பஜன் சிங்
|ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
மும்பை,
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடக்கவுள்ளது. ஆனால் எல்லைப் பிரச்சனை காரணமாக அந்நாட்டிற்கு சென்று விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் தங்களுடைய போட்டிகளை இலங்கை அல்லது துபாய் மண்ணில் நடத்துமாறு ஐசிசி-க்கு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
இதனிடையே கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியா வந்தது. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்திய அணி அங்கு வர வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் என்ன நடந்தாலும் அடுத்த ஆண்டு இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் சில கருத்துகளை நேரலையில் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "இந்திய வீரர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அவாறு நடக்காவிட்டால் எங்களது அணியை அனுப்ப மாட்டோம். பாகிஸ்தானில் எங்கள் வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் நிச்சயமாக இந்திய அணி அங்கு செல்லாது. நாங்கள் இல்லாமல் நீங்கள் விளையாட விரும்பினால் அந்த தொடரை நடத்திக் கொள்ளுங்கள். அதனால் இந்திய கிரிக்கெட்டுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது" என்று கூறினார்.