எனக்கு ஏதாவது சரியாக செல்லவில்லை என்றால் அங்கே அவர் உதவி செய்வதற்காக இருப்பார் - வருண் சக்ரவர்த்தி பேட்டி
|ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
கொல்கத்தா,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 47வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்று முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி கொல்கத்தா வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 20 ஓவர்கள் வரை பேட்டிங் செய்த டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்தது.
டெல்லி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 35 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 154 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 157 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக சால்ட் 68 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் அக்சர் படேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்ரவர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
போட்டி நடைபெற நடைபெற பிட்ச் கொஞ்சம் நின்று வந்ததை நீங்கள் பார்த்தீர்கள். 2-வது இன்னிங்ஸில் அது கொஞ்சம் நன்றாக சுழன்றது. ரிஷப் பண்ட்-க்கு எதிராக முதல் பந்திலேயே கேட்ச் தவறியது. அதை மிகவும் நல்ல பந்து என்று நினைத்த நான் விரைவில் அவரை அவுட்டாக்கினேன். அது மற்ற மைதானத்தில் சிக்ஸராக போயிருக்கலாம்.
இப்போதெல்லாம் வெற்றி சிறிய வித்தியாசத்தில் தீர்மானிக்கப்படுகிறது. ஸ்டப்ஸ் விக்கெட்டை எடுத்தது எனக்கு பிடித்திருந்தது. பொதுவாக எனக்கு ஏதாவது சரியாக செல்லவில்லை என்றால் அங்கே சுனில் நரேன் உதவி செய்வதற்காக இருப்பார். அதிக ரன்களை வாரி வழங்கிய கடந்த போட்டியை மறக்க வேண்டும்.
இருப்பினும் அந்த போட்டி முடிந்ததும் அபிஷேக் நாயர் மற்றும் ஷாருக்கான் போன்ற பலரும் என்னிடம் பேசி உத்வேகத்தை கொடுத்தனர். இனிமேல் சியர் லீடர் பெண்கள் பவுண்டரிக்கு பதிலாக சிக்ஸர்கள் அடித்தால் மட்டுமே நடனமாட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.