வங்கதேசத்துக்கு எதிராக பண்ட் சிறப்பாக செயல்படவில்லை என்றால் மாற்று வீரரை தேர்வு செய்யலாம் - இந்திய முன்னாள் வீரர்
|வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் பண்ட் சிறப்பாக செயல்படவில்லை என்றால் மாற்று வீரரை தேர்வு செய்யலாம் என இந்திய முன்னாள் வீரர் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் படுதோல்வி அடைந்து வெளியேறிய பின்னர் நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடிய இந்திய அணி டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஒருநாள் தொடரை 1-0 என்ற கணக்கில் இழந்தது.
இந்தத்தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ரோகித், ராகுல், விராட், புவனேஷ்வர் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இளம் வீரர்களுடன் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடியது. இந்த இரு தொடர்களிலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் இடம் பிடித்தார்.
ஆனால் அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக அணியில் இருந்த சஞ்சு சாம்சனை ஆடும் லெவனில் எடுக்க வேண்டும் என பல்வேறு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வந்தது. ஆனால் முதல் ஒருநாள் போட்டியில் மட்டும் சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்நிலையில், இந்திய அணி வரும் 4ந்தேதி முதல் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது. இந்த தொடருக்கும் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சபா கரீம் ரிஷப் பண்ட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது,
என்னப்பொறுத்தவரை நான் ரிஷப் பண்ட்டையே தேர்வு செய்வேன். அவர் வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் எவ்வாறு செயல்படுகிறார் என பார்க்க வேண்டும். அவரை நிரந்தரமாக 5வது வரிசையில் களம் இறக்க வேண்டும். அவர் இந்தத்தொடரில் நன்றாக செயல்படவில்லை என்றால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்யலாம். அது சஞ்சு சாம்சன் அல்லது இஷன் கிஷனாக இருக்கலாம் என்றார்.
அவர் மேலும் கேப்டன் ரோகித் பற்றி கருத்து கூறும்போது,
ரோகித் சர்மாவின் மிகப்பெரிய சவால் என்னவென்றால் அவரது பேட்டிங் தான். நீங்கள் உங்கள் பேட்டிங் சிறப்பாக செயல்பட்டீர்கள் என்றால் உங்கள் கேப்டன்சியும் தானாகவே முன்னேறும். ரன்கள் அடிப்பது மிக முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.