< Back
கிரிக்கெட்
அப்படி மட்டும் நடந்து விட்டால் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறாது - பாக். முன்னாள் வீரர் கவலை
கிரிக்கெட்

அப்படி மட்டும் நடந்து விட்டால் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறாது - பாக். முன்னாள் வீரர் கவலை

தினத்தந்தி
|
13 Aug 2024 7:34 PM IST

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.

லாகூர்,

2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 8 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. ஆனால் இந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இரு நாட்டு அணிகளும் ஆசிய மற்றும் ஐ.சி.சி தொடர்களில் மட்டுமே நேருக்கு நேர் மோதி வருகின்றன.

மேலும் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றது. ஆனால் அப்போது பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத இந்தியா தங்களது போட்டிகளை இலங்கையில் விளையாடி சாம்பியன் பட்டம் வென்றது. அதேபோல 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை துபாய் அல்லது இலங்கைக்கு மாற்றுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) பி.சி.சி.ஐ கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது குறித்து ஐ.சி.சி இன்னும் முடிவு செய்யவில்லை.

மறுபுறம் இந்தியா வரவில்லை என்றால் அவர்களைப் புறக்கணித்து விட்டு மற்ற அணிகளை வைத்து சாம்பியன்ஸ் டிராபியை தங்களது நாட்டிலேயே நடத்த பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பெஷாவரில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சம்பவங்கள் நடந்ததாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார். எனவே இந்தியா சொல்வது போல் பாதுகாப்பு பிரச்சினைகளை பாகிஸ்தான் அரசு சரி செய்யவில்லை என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். அத்துடன் அடுத்ததாக நடைபெறும் வங்காளதேசம், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடர்களின்போது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிகழ்வுகள் நடந்தால் சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடப்பது சந்தேகம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில் வங்காளதேச தொடருக்குப்பின் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நம் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றன. எனவே நாம் பாதுகாப்புக்கு கவனம் கொடுக்க வேண்டும். இந்த சுற்றுப்பயணங்களில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சாம்பியன்ஸ் டிராபி கண்டிப்பாக இங்கு நடக்காது. ஆனால் பலூசிஸ்தானிலும் பெஷாவரிலும் நமது ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்து வருகின்றனர்.

அது ஏன் நடக்கிறது என்பதற்கு அரசாங்கம் மட்டுமே பதிலளிக்க முடியும். அது மிகவும் தவறு. இந்த நேரத்தில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சிறு விஷயங்கள் நடந்தால் கூட சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடக்காது. நமது குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கொடுக்கப்படும் அதே பாதுகாப்பை வெளிநாட்டு அணிகளுக்கு கொடுக்க வேண்டும். அதை நம் வாரியத் தலைவர் (மொஷின் நக்வி) அறிவார் என்று நம்புகிறேன்" என கூறினார்.

மேலும் செய்திகள்