தந்தை இல்லையென்றால் நான் இங்கு இல்லை - யாஷ் தாக்கூர் உருக்கம்
|ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ வீரர் யாஷ் தாக்கூர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
லக்னோ,
ஐ.பி.எல் தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற 21வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து 164 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 33 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது.
லக்னோ தரப்பில் அபாரமாக பந்துவீசிய யாஷ் தாக்கூர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற பின் யாஷ் தாக்கூர் அளித்த பேட்டியில் கூறியதாவது, "இந்த போட்டியில் நான் வென்ற இந்த ஆட்ட நாயகன் விருதை என்னுடைய தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன். அவர் தற்போது இல்லை. என்னை ஆட்டநாயகனாக பார்ப்பது அவரது கனவாக இருந்தது. அவருடைய வாழ்நாள் முழுவதும் எனக்கு ஆதரவாக இருந்தார். அவர் இல்லையென்றால் நான் இங்கு இல்லை. நான் காயம் அடைந்தபோதும் சரி அல்லது கடினமான நேரங்களிலும் சரி எனது குடும்பத்தினரே எனக்கு ஆதராவாக இருந்தனர்" என்று கூறினார்.