< Back
கிரிக்கெட்
நானோ அல்லது தீபக் ஹூடாவோ 20 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தால்... - கே.எல். ராகுல்
கிரிக்கெட்

நானோ அல்லது தீபக் ஹூடாவோ 20 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தால்... - கே.எல். ராகுல்

தினத்தந்தி
|
28 April 2024 11:55 AM IST

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ தோல்வியை தழுவியது.

லக்னோ,

அனல் பறக்க நடந்து வரும் 17-வது ஐ.பி.எல். சீசனின் 44-வது லீக் போட்டி லக்னோவில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை குவித்தது. பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 19 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 199 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் கூறுகையில் :

இந்த போட்டியில் நாங்கள் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டதாக நினைக்கிறேன். எங்கள் இன்னிங்சின்போது துவக்கம் சரியாக அமையவில்லை. இருப்பினும் தீபக் ஹூடா மற்றும் நானும் இணைந்து நல்ல பாட்னர்ஷிப்பை அமைத்தோம். இது போன்ற போட்டியில் ஒரு பேட்ஸ்மேன் செட் ஆகிவிட்டால் 50-60 ரன்களை கடந்த பின்னர் சதத்தை நோக்கி சென்றிருக்க வேண்டும். அதேபோன்று 15 ஓவர்களில் 150 ரன்கள் வரை சென்றிருந்தால் அடுத்த ஐந்து ஓவர்களில் இன்னும் கூடுதலாக ரன்களை அடிக்க வேண்டும்.

இப்போதெல்லாம் எந்த அணி அதிக சிக்சர்களை அடிக்கிறதோ அந்த அணியே வெற்றி பெறுகிறது. எனவே இந்த போட்டியில் நாங்கள் அதிக சிக்சர்களை அடிக்க முயற்சித்து இருக்க வேண்டும். நானோ அல்லது தீபக் ஹூடாவோ 20 ரன்கள் வரை கூடுதலாக எடுத்திருந்தால் அணியின் எண்ணிக்கை 220-யை தாண்டி இருக்கும். அந்த 20 ரன்கள்தான் தற்போது எங்களுக்கு சற்று பின்னடைவை தந்தது. எப்படி இருப்பினும் இந்த போட்டியில் நாங்கள் நல்ல ஆட்டத்தையே வெளிப்படுத்தியதாக நினைக்கிறேன். ஸ்டோய்னிஸ் மற்றும் பூரன் போன்ற ஹிட்டர்கள் இன்று விரைவில் ஆட்டமிழந்ததால் சற்று பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் இந்த தோல்வியில் இருந்து மீண்டு வந்து வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்