டெஸ்ட் கிரிக்கெட்டில் கில் சிறப்பாக செயல்படவில்லை என்றால் அவரது இடம் கேள்விக்குறியாகிவிடும் - தினேஷ் கார்த்திக்
|இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
மும்பை,
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் பெரும் சரிவை சந்தித்தது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் தடுமாற்றமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் நடைபெறும் ஆட்டத்தில் அவரது பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளது.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் முதல் இன்னிங்சில் 2 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 26 ரன்கள் மட்டுமே குவித்து ஏமாற்றம் அளித்தார்.
இந்நிலையில் சுப்மன் கில் தொடர்ச்சியாக இதே போன்ற செயல்பாட்டை வெளிப்படுத்தினால் அவரது டெஸ்ட் இடமானது வேறு வீரருக்கு சென்று விடும் என தினேஷ் கார்த்திக் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,
டெஸ்ட் கிரிக்கெட்டில் கில் சிறப்பாக செயல்படவில்லை என்றால் அவரது இடம் கேள்விக்குறியாகிவிடும். நிச்சயம் எதிர்பார்ப்புகள் அளவிற்கு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான செயல்பாடுகளை இதுவரை வெளிப்படுத்தவில்லை. கிட்டத்தட்ட 20 போட்டிகள் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியும் 30 ரன்களுக்குள் தான் சராசரி வைத்திருக்கிறார்.
எனவே இவ்வாறு விளையாடினால் அவரது இடத்தை விரைவில் இழக்க நேரிடும். மேலும் அவரது இடத்திற்காக உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் சர்பராஸ் கான் மற்றும் ரஜத் பட்டிதார் ஆகிய இருவருமே காத்துக் கொண்டிருக்கின்றனர். நிச்சயம் விரைவில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.