டி20 உலகக்கோப்பைக்கான அணியில் துபே தேர்வு செய்யப்படாவிட்டால், சி.எஸ்.கே தான் பொறுப்பேற்க வேண்டும் - மனோஜ் திவாரி
|20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் 1ம் தேதி தொடங்குகிறது.
மும்பை,
20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் 1ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க இந்திய வீரர்கள் நடப்பு ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்நிலையில் நடப்பு ஐ.பி.எல் தொடர் மட்டுமின்றி கடந்த இரு சீசன்களாக சிறப்பாக விளையாடி வரும் ஷிவம் துபேவை டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என யுவராஜ் சிங், வீரந்திர சேவாக் போன்ற ஜாம்பவான்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பேட்டிங்கில் மிரட்டும் துபே பந்து வீச்சிலும் அசத்தினால் 2024 டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ஆல் ரவுண்டராக தேர்வு செய்யப்பட பிரகாச வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக ஆல்-ரவுண்டராக விளையாட வேண்டுமெனில் பாண்ட்யா சிறப்பாக பந்து வீச வேண்டும். ஏனெனில் 11 என்ற எக்கனாமியில் பந்து வீசும் அவர் இந்த சீசனில் அசத்தவில்லை. எனவே இந்தப் பார்மில் பாண்ட்யாவை டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்ய முடியாது. அஜித் அகர்கர் வலுவான கேரக்டர் என்பதால் கடினமான முடிவுகளை எடுப்பார்.
ஒருவேளை டி20 உலகக் கோப்பையில் துபே தேர்வு செய்யப்படாமல் போனால் அதற்கு சி.எஸ்.கே தான் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் அவர்கள் துபேவை பவுலிங் செய்ய அனுமதிக்க மறுக்கின்றனர். பாண்ட்யாவுக்கு பதிலான மாற்று வீரர் வேண்டுமெனில் துபே பவுலிங் செய்ய வேண்டும் என்பதை நான் நீண்ட காலமாக சொல்லி வருகிறேன்.
ஒரு கட்டத்தில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் துபே ஆகியோர் பவுலிங் செய்தனர். ஆனால் திடீரென அவர்கள் அதை நிறுத்தி விட்டனர். எனவே நாம் நீண்ட காலத் திட்டத்தை பற்றி பார்க்க வேண்டும். தற்போது பாண்ட்யா நல்ல பார்மில் இல்லாத நிலையில் துபேவை தேர்வு செய்யலாம். ஆனால் அவருடைய பவுலிங் எப்படி இருக்கிறது என்பது நமக்கு தெரியாது. இருப்பினும் அவர் பவுலராக ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் எப்படி அசத்தினார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.