எந்த விலைகொடுத்தாயினும் இந்தியா அரையிறுதிக்கு செல்ல ஐசிசி விரும்புகிறது - பாக். முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு
|எந்த விலைகொடுத்தாயினும் இந்தியா அரையிறுதிக்கு செல்ல ஐசிசி விரும்புவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நவம்பர் 2-ந் தேதி நடந்த ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கோலி, ராகுல் சூர்யகுமார் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. அப்போது இடையில் மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டது. இதனால் டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி, வங்காளதேச அணி 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் அந்த அணியால் 16 ஓவர்கள் முடிவில் 145 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் இந்திய அணி டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி கூறுகையில்:-
ஐசிசி இந்தியாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. நீங்களே பார்த்திருப்பீர்கள் மழையால் மைதானம் மிகவும் ஈரமாக இருந்தது. ஆனால் ஐசிசி அந்த ஆட்டத்தில் இந்தியாவுகு சாதகமாக செயல்பட்டது. எந்த விலைகொடுத்தாயினும் இந்தியா அரையிறுதிக்கு செல்ல ஐசிசி விரும்புகிறது.
எப்படியாவது இந்தியா அரை இறுதிக்குள் வர இவ்வாறு செயல்பட்டுள்ளனர். இந்த ஆடத்தில் நடுவர்களாக செயல்பட்டவர்களே இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்திலும் நடுவர்களாக செயல்பட்டனர். அவர்களுக்கு சிறந்த நடுவர்களுக்கான விருது வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.