ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை: ஜோ ரூட் முதலிடம்.. ரோகித் ஒரு இடம் முன்னேற்றம்
|டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்த ஹாரி புரூக் 7-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
துபாய்,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 3-லும் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது.
இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் ஏராளமாக சாதனைகள் படைத்து அசத்தினார். அதன் மூலம் அவர் 872 புள்ளிகளுடன் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இதுவரை முதலிடத்தில் இருந்த நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் (859 புள்ளி) 2-வது இடத்துக்கு சரிந்துள்ளார்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்டில் சொதப்பிய இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் 3வது இடத்தில் இருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளார். இதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒரு இடம் உயர்ந்து 6-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணியின் மற்ற வீரர்களில் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 10-வது இடத்தில் நீடிக்கிறார்.
டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் பெரிய அளவில் மாற்றமில்லை.