ஐ.சி.சி. டி20 தரவரிசை: வெஸ்ட் இண்டீஸ் நல்ல முன்னேற்றம்.. இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா..?
|டி20 போட்டிகளில் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
துபாய்,
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான 3 டி20 போட்டிகள் ( 4 போட்டிகள் கொண்ட தொடர்) முடிவடைந்துள்ளன. இதில் வெஸ்ட் இண்டீஸ் 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்து தொடரை கைப்பற்றி அசத்தியது. பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்ட நிலையில், இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்த முடிவுகளை கணக்கில் கொண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டி20 போட்டிகளில் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் 3 இடங்களில் முறையே இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மாற்றமின்றி தொடருகின்றன.
இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக தரவரிசையில் 6-வது இடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் கிடுகிடுவென முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்து மாற்றமின்றி 5-வது இடத்தில் தொடருகிறது. பாகிஸ்தான் 1 இடம் முன்னேறி 6-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 3-இடங்கள் சரிந்து 7-வது இடத்திலும் உள்ளது. கடைசி 3 இடங்களில் இலங்கை, வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன.