ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசை: இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் முன்னேற்றம்..!!
|ஜெமிமா ரோட்ரிக்ஸ் டி20 பேட்டிங் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.
துபாய்,
மகளிருக்கான டி20 பேட்டிங் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டுள்ளது. தற்போது நடந்து வரும் ஆசிய கோப்பையில், இலங்கை அணிக்கு எதிரான தொடக்க போட்டியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியதன் மூலம் இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இந்த தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.
ஜெமிமா 641 ரேட்டிங் புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்த தரவரிசையில் இந்திய வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா 3-வது இடத்திலும் (717 ரேட்டிங் புள்ளி) ஷபாலி வர்மா 7-வது இடத்திலும் (648 ரேட்டிங் புள்ளி) உள்ளனர். ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி முதல் இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளார். 2-வது இடத்தில் மற்றொரு ஆஸ்திரேலிய வீராங்கனை மெக் லானிங் உள்ளார்.
மகளிர் ஆசிய கோப்பையில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியிலும் ஜெமிமா சிறப்பாக விளையாடி 45 பந்தில் 75 ரன்களை குவித்தார். இந்த போட்டியில் இந்திய அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.