ஐசிசி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு...!!
|ஒருநாள் போட்டிகளின் பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார்.
துபாய்,
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இதில் ஒருநாள் போட்டிகளின் பேட்ஸ்மேன் தரவரிசையில் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார். 3-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர் பகார் ஜமான் 2 இடங்கள் பின் தங்கி 5-வது இடத்திற்கு சரிந்துள்ளார். 5-வது இடத்தில் இருந்த சுப்மன்கில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதனை தொடர்ந்து இந்திய அணி தரப்பில் 9-வது இடத்தில் விராட் கோலியும் 11-வது இடத்தில் ரோகித் சர்மாவும் நீடிக்கின்றனர்.
ஒருநாள் போட்டிகளின் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் முதல் 2 இடங்களில் நீடிக்கின்றனர். 6-வது இடத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரகுமான் கிடுகிடுவென முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 5-வது இடமும், குல்தீப் யாதவ் 10-வது இடமும் பிடித்துள்ளனர்.
டி20 போட்டிகளை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஒரே ஒரு இந்தியர் மட்டுமே டாப் 10-ல் இடம் பிடித்துள்ளார். பேட்டிங் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறார். ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஹர்திக் பாண்ட்யா 2-வது இடத்தில் நீடிக்கிறார். அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம் ருதுராஜ் கெய்க்வாட் 143 இடங்கள் முன்னேறி 87-வது இடத்தை பிடித்துள்ளார். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் யாரும் முதல் 10 இடங்களுக்குள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.