< Back
கிரிக்கெட்
ஆண்களுக்கான ஐசிசி கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியீடு: கோலி, ரோகித் முன்னேற்றம்...!

Image Courtesy: ICC Twitter 

கிரிக்கெட்

ஆண்களுக்கான ஐசிசி கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியீடு: கோலி, ரோகித் முன்னேற்றம்...!

தினத்தந்தி
|
11 Jan 2023 3:45 PM IST

ஆண்களுக்கான கிரிக்கெட் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது.

துபாய்,

ஆண்களுக்கான கிரிக்கெட் தரவரிசையை ஐசிசி அறிவித்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, பாகிஸ்தான் - நியூசிலாந்து, ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பின்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆண்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடி இரட்டை சதத்தை நெருங்கிய உஸ்மான் கவஜா டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 8வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் லபுஸ்சாக்னே முதல் இடத்தில் உள்ளார். இந்தியா தரப்பில் கார் விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் 7-வது இடத்திலும் கேப்டன் ரோகித் 10-வது இடத்திலும் உள்ளனர்.

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் முதல் இடத்தில் உள்ளார். இந்திய பந்து வீச்சாளர்கள் பும்ரா 3-வது இடத்திலும், அஷ்வின் 4-வது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பிய ககிசோ ரபடா ஒரு இடம் சரிந்து 7-வது இடத்துக்கு வந்துள்ளார்.

டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவிசையில் இந்தியாவின் ஜடேஜா, அஷ்வின் ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர்.

ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் முதல் இடத்தில் உள்ளார். இலங்கை அணிக்கு எதிராக அதிரடியாக சதம் அடித்து அசத்திய இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி 2 இடங்கள் முன்னேறி 6-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். அதே போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா 1 இடம் முன்னேறி 8-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் டிரெண்ட் பவுல்ட் முதல் இடத்திலும், ஹேஸ்லேவுட், ஸ்டார்க், ரசித் கான், மேட் ஹென்றி 2 முதல் 5 இடங்களில் உள்ளனர். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய அணி தரப்பில் முதல் 10 இடங்களுக்கும் ஒருவரும் இல்லை.

ஒருநாள் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஷகிப் அல் ஹசன், முகமது நபி, மெஹதி ஹசன், ரசித் கான், மிட்செல் சாண்ட்னெர் ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர்.

டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இலங்கை அணிக்கு எதிராக அதிரடி சதம் அடித்து அசத்திய சூர்யகுமார் யாதவ் முதல் இடத்தை தக்க வைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக முகமது ரிஸ்வான், யேவான் கான்வே, பாபர் ஆசம், ஏய்டன் மார்க்ரம் ஆகியோர் 2 முதல் 5 இடங்களில் உள்ளனர்.

டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் சொதப்பிய ஹசரங்கா முதல் இடத்தை பறிகொடுத்துள்லார். இதனால் ரசித் கான் முதல் இடத்துக்கு முன்னேறினார். அடில் ரஷித், ஹேச்லேவுட், சாம் கர்ரன் 3 முதல் 5 இடங்களில் உள்ளனர்.

டி20 ஆல்ரவுண்டர்கள் தரவிசையில் ஷகிப் அல் ஹசன், முகமது நபி, ஹர்த்திக் பாண்ட்யா, சிக்கந்தர் ராசா, வனிந்து ஹசரங்கா ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர்.

மேலும் செய்திகள்