< Back
கிரிக்கெட்
ஐ.சி.சி. இந்தியாவுக்கு சாதகமாக நடந்து கொள்கிறதா..? சாம்பியன்ஸ் டிராபியில் தெரிந்துவிடும் - பாக். முன்னாள் வீரர்
கிரிக்கெட்

ஐ.சி.சி. இந்தியாவுக்கு சாதகமாக நடந்து கொள்கிறதா..? சாம்பியன்ஸ் டிராபியில் தெரிந்துவிடும் - பாக். முன்னாள் வீரர்

தினத்தந்தி
|
4 July 2024 7:58 PM IST

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.

லாகூர்,

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடக்க உள்ளது. பாகிஸ்தானில் நடக்கும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க 8 அணிகள் தகுதிபெற்றுள்ளன. உலகக்கோப்பை தொடரில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்த தொடரில் விளையாட உள்ளன. இந்த தொடர் பிப்ரவரி 19ந் தேதி முதல் மார்ச் 9ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா? என்பது தற்போதுவரை உறுதியில்லை. மத்திய அரசின் அனுமதியை பொறுத்துதான் இருக்கிறது. இதனால் பி.சி.சி.ஐ. தரப்பில் இருந்து விரைவில் மத்திய அரசிடம் அனுமதி கேட்டு முடிவு செய்வார்கள் என்று கூறப்படுகிறது. கடந்த 2008-ம் ஆண்டு ஆசிய கோப்பைக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தற்போது நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் வென்றுள்ளது. முன்னதாக அந்தத் தொடரில் ஐசிசி இந்தியாவுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக பலரும் விமர்சித்தனர். குறிப்பாக இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றால் கயானா நகரில் தான் விளையாடும் என்று ஆரம்பத்திலேயே ஐசிசி அறிவித்து விட்டது.

ஏனெனில் டிரினிடாட் நகரில் விளையாடினால் அதிகாலை 6:00 மணிக்கு அப்போட்டியை இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள். எனவே ஒளிபரப்பு நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று இரவு 8 மணிக்கு நகரில் நடைபெறும் 2வது அரையிறுதியில் இந்தியா விளையாடும் என்று ஐசிசி அறிவித்தது. ஆனால் அதற்காக அரையிறுதி நடைபெறும் மைதானத்தை முன்கூட்டியே அறிவித்து இந்தியாவுக்கு ஆதரவாக நடந்து கொண்ட ஐசிசி மற்ற அணிகளுக்கு அநியாயத்தை செய்ததாக மைக்கேல் வாகன் விமர்சித்தார்.

இந்நிலையில் ஐசிசி பொதுவாக நடந்து கொள்கிறதா? அல்லது இந்தியாவுக்கு சாதகமாக செயல்படுகிறதா? என்பதை 2025 சாம்பியன்ஸ் டிராபியில் தெரிந்து கொள்ளலாம் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் தெரிவித்துள்ளார். ஏனெனில் தங்கள் நாட்டுக்கு வராமல் அடம் பிடிக்கும் இந்தியாவை 2025 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானில் விளையாட வைப்பது ஐசிசியின் கடமை என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "எல்லாவற்றையும் பரபரப்பாக்க முயற்சிக்கிறோம். ஜெய் ஷா சாதகமான சிக்னல் கொடுத்ததாக சில தகவல்கள் வந்துள்ளன. இருப்பினும் அவர் எந்த சிக்னலும் கொடுத்ததாக எனக்கு தெரியவில்லை. அவரிடமிருந்து நல்ல சிக்னல் கிடைத்திருந்தால் கூட நான் உற்சாகமாக இருந்திருக்க மாட்டேன். ஏனெனில் அனைத்து அணிகளும் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வைப்பதை உறுதி செய்வது ஐசிசியின் கடமை. ஒருவேளை இந்தியா வந்தால் வரவேற்கப்படுவார்கள். இல்லையென்றால் அதை ஐசிசி சமாளிக்க வேண்டும். அவர்களால் மற்ற நாடுகளைப் போல இந்தியாவையும் சமாளிக்க முடியுமா என்பதை இப்போது கண்டறிய முடியும். ஒரு கட்டுப்பாட்டாளராக அவர்களுக்கு எவ்வளவு அதிகாரம் உள்ளது மற்றும் அவர்கள் எந்தளவுக்கு நடுநிலையுடன் செயல்படுகிறார்கள் என்பதை இது காண்பிக்கும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்