சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டிற்கு ஐசிசி அறிவித்துள்ள புதிய பாலின விதி!
|புதிய விதியின் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்ற முதல் திருநங்கையான டேனியல் மெக்காஹே இனி பெண்கள் கிரிக்கெட்டில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் பந்துவீச்சில் நேரத்தை மீறினால் எதிரணிக்கு 5 ரன்கள், நடுவர்களுக்கு சமஊதியம் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
மற்றொரு முக்கிய முடிவாக புதிய பாலின தகுதி விதிமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆணுக்குரிய தன்மையை கொண்ட ஒருவர் ஹார்மோன் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறியவர்கள், சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் விளையாட தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த விதி, சர்வதேச போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், உள்ளூர் போட்டிகளுக்கு அந்த நாடுகளின் பாலின வரையறை செயல்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதியின் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் கலந்து கொண்ட முதல் திருநங்கையான டேனியல் மெக்காஹே இனி பெண்கள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்தாண்டு துவக்கத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்த டேனியல் மெக்காஹே, ஆஸ்திரேலியா நாட்டில் பிறந்தவர் ஆவார். கனடா நாட்டிற்கு குடிபெயர்ந்த அவர், கனடாவிற்காக விளையாடி வருகிறார்.