< Back
கிரிக்கெட்
ஆண்கள், பெண்கள் அணியினருக்கு ஐ.சி.சி. கிரிக்கெட் போட்டிகளில் சரிசம பரிசுத்தொகை வழங்க முடிவு

கோப்புப்படம் 

கிரிக்கெட்

ஆண்கள், பெண்கள் அணியினருக்கு ஐ.சி.சி. கிரிக்கெட் போட்டிகளில் சரிசம பரிசுத்தொகை வழங்க முடிவு

தினத்தந்தி
|
14 July 2023 3:22 AM IST

திருத்தப்பட்ட புதிய வருவாய் பகிர்வுக்கும் ஐ.சி.சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

டர்பன்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) சார்பில் இனிமேல் நடத்தப்படும் உலக கோப்பை உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு சரிசமமான பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஐ.சி.சி.தலைவர் கிரேக் பார்கிளே நேற்று அறிவித்தார். தென்ஆப்பிரிக்காவின் டர்பனில் நடந்த ஐ.சி.சி. கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. 2017-ம் ஆண்டில் இருந்து பெண்கள் கிரிக்கெட்டுக்கான பரிசுத்தொகையை அதிகரித்து வருவதாகவும், சரிசம பரிசுத்தொகை வழங்கும் இந்த முடிவு கிரிக்கெட் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் பார்கிளே தெரிவித்தார்.

பல்வேறு நாடுகளில் தற்போது 20 ஓவர் வடிவிலான லீக் போட்டிகள் தொடங்கப்படுகின்றன. அமெரிக்காவில் எம்.எல்.சி. லீக் நடத்தப்படுகிறது. சவுதிஅரேபியாவிலும் 20 ஓவர் கிரிக்கெட் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 20 ஓவர் லீக்கில் உள்ளூர் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஆடும் லெவனில் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று ஐ.சி.சி. தெளிவுப்படுத்தியுள்ளது.

திருத்தப்பட்ட புதிய வருவாய் பகிர்வுக்கும் ஐ.சி.சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி அடுத்த 4 ஆண்டு காலக்கட்டத்தில், ஐ.சி.சி.யின் ஆண்டு மொத்த வருவாயில் 38.5 சதவீதம் இந்தியாவுக்கு கிடைக்கும். அதாவது ஆண்டுக்கு ஏறக்குறைய ரூ.1,887 கோடியை பெறுவார்கள். ஐ.சி.சி.யில் முழு உறுப்பினராக உள்ள வேறு எந்த நாட்டுக்கும் வருவாய் பகிர்வு சதவீத தொகை இரட்டை இலக்கத்தை தொடவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு கூட 6.25 சதவீத வருவாய் தான் கிடைக்க உள்ளது.

மேலும் செய்திகள்